தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். இதற்காக திருச்சி வந்ததார் விஜய்! கட்டுக்கடங்காத தொண்டர்களின் கூட்டத்தால் திருச்சியே திணறிக்கொண்டிருக்கிறது.
தவெக விஜய் தனது முதல் பிரச்சார பயணத்தை திருப்புமுனையை ஏற்படுத்தும் திருச்சியில் இருந்து தொடங்குகிறார். திருச்சி மரக்கடை அருகே எம்ஜிஆர் சிலைக்கு பக்கத்தில் விஜய் பேசுவதற்கு சரியாக அரை மணி நேரம் மட்டுமே காவல் துறை வழங்கியது.
அதாவது 10.30 மணி முதல் 11 மணி வரை மட்டுமே பேச அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் கொடுத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் இந்த கட்டுப்பாடுகள். இந்த பிரச்சாரத்திற்காக அவருக்கு தனி பிரத்யேக பிரச்சார வேனும் தயார் செய்யப்பட்டது. அதில் கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருக்கும்.
இந்த பிரச்சாரத்திற்காக அவர் சென்னையிலிருந்து இன்று காலை தனிவிமானம் மூலம் புறப்பட்டார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள் யாரும் வரக் கூடாது என்பதற்காக தடுப்புகள் போட்டும் அதைத்தாண்டி ஓடிவந்தனர்.
இதையடுத்து எப்படியோ விஜய் பிரச்சார வாகனத்தில் ஏறிவிட்டார். அவரது வாகனம் தொண்டர்கள் வெள்ளத்தில் ஊர்ந்து சென்றது. இதனால் அவரால் 15 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட மரக்கடைக்கு வர முடியுமா என சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் அவருக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இதுவரை விஜய், மரக்கடை பக்கம் வரவில்லை. இவர் வரும் வழியெல்லாம் கூட்டம் அதிகமாகியுள்ளது. விமான நிலையத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் வழியாக தலைமை தபால் நிலைய சிக்னல், மேலப்புதூர் சுரங்கப்பாதை வழியாக பாலக்கரை பிரபாத் ரவுண்டானா, பழைய மதுரை சாலையில் உள்ள மரக்கடைக்கு ஊர்ந்து வந்து கொண்டிருக்கிறார்.
விஜய் தனது பேச்சை முடித்துக் கொண்டு, காந்தி சந்தை, தர்பார் சாலை , பழைய பால் பண்ணை வழியாக அரியலூர் திரும்பும் அளவுக்கு இவரது திட்டம் வகுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்னும் மரக்கடைக்கே இவரது வாகனம் வராததால் 11 மணிக்கு மேல் பேசினால் இவர் மீது வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பிருக்கிறது. விஜய் பேசும் இடத்திற்கு செல்வதற்கு இன்னும் ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகும் என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் விஜய்யின் வருகை திருச்சியையே திணறிடித்துக்கொண்டிருக்கிறது.