‘‘உங்கள் எல்லோருக்கும் ஒரு சிறிய சர்ப்ரைஸ் கொடுக்க இருக்கிறேன். வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்க உள்ளேன்.

மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் யார் தெரியுமா? விஜய். ஆம், நான்தான். மதுரை மேற்கு வேட்பாளர் விஜய், மதுரை மத்தி வேட்பாளர் விஜய், உசிலம்பட்டி வேட்பாளர் விஜய். திருப்பரங்குன்றம் விஜய், திருமங்கலம் விஜய்…’’ என மதுரை மாநாட்டில் அடுக்கு மொழியில் பேசினார் த.வெ.க. தலைவர் விஜய்.

இனிகோ இருதயராஜ்

ஆனால், உண்மையில் திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதற்கான காரணம் ஒன்றல்ல… இரண்டல்ல… அதனால்தான் திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார் விஜய்!

ஆர்.மனோகரன்

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியைத் பொறுத்தளவில் அ.தி.மு.க.வின் கோட்டை என்றே சொல்லலாம். கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆர்.மனோகரன் வெற்றி பெற்று அரசு கொறடாவாக இருந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் இனிகோ இருதயராஜ். சிறுபான்மை (கிறிஸ்துவ) சமுதாயத்தைச் சேர்ந்த இனிகோ இருதயராஜ் தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

திருச்சி கிழக்குத் தொகுதியைப் பொறுத்தளவில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடியவர்கள் சிறுபான்மையினர் மக்கள்தான். தற்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியை எதிர்பார்த்து இருக்கிறார் முன்னாள் அரசு கொறடா ஆர்.மனோகரன். ஆனால், ‘மாவட்டச் செயலாளராக இருக்கும் நான்தான் திருச்சி கிழக்கில் போட்டியிடுவேன்’ என மார்தட்டிக் கொள்வதோடு, தேர்தல் வேலைகளிலும் இறங்கிவிட்டார் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன்!

ஜெ.சீனிவாசன்…

தி.மு.க.வைப் பொறுத்தளவில் வழக்கம் போல் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. அது கே.என்.நேருவின் கையில் இருக்கிறது. இந்தமுறை இனிகோவுக்கு வாய்ப்பில்லை. காரணம், கே.என்.நேருவுக்கும் இனிகோவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

இந்த நிலையில்தான் சிறுபான்மையின சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் முடிவு செய்திருக்கிறார். இந்தப் பின்னணியில் கிறிஸ்துவ அமைப்பில் இருந்துகொண்டு, ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துவரும் இனிகோ இருக்கிறார் என்கிறார்கள். திருச்சி கிழக்கில் விஜய் போட்டியிடும் வகையில் சில வேலைகளைச் செய்துவருகிறாராம் இனிகோ. அவருக்கும் த.வெ.க.வில் விரைவில் முக்கிய பொறுப்பு ஒன்றை விஜய் தரவிருக்கிறாராம். இந்தப் பின்னணியில்தான் திருச்சியிலிருந்து விஜய் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

இப்பச் சொல்லுங்க திருச்சி கிழக்கில் தி.மு.க., அ.தி.மு.க.வில் யாராவது போட்டியிட இதே போல் ஆர்வம் காட்டுவீர்ளா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal