அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் இருக்கவேண்டும். ஆனால், தமிழகத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் மனதில் ‘வெறுப்பு அரசியல்’ இருப்பதுதான் வேதனை அளிக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே ஆவராங்குடிப்பட்டியில் 51-ஆவது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இது கடந்த 23-ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியைப் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இந்தப் போட்டியில் 250 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் கடந்த இரு வாரங்களில் நடந்து முடிந்த டபுள் டிராப், ஸ்கீட் ஆகிய பிரிவுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். போட்டிகளில் வென்று முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை அண்ணாமலை வழங்கினார். ஒவ்வொருவருக்கும் பதக்கங்களை கழுத்தில் அணிவித்து வந்தார்.
அப்போது அந்த வெற்றியாளர்களில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகன் சூரியராஜாபாலுவும் இருந்தார். அவரது கழுத்தில் அண்ணாமலை பதக்கத்தைப் போட முயன்றபோது, அதை ஏற்க அவர் மறுத்தார். ஒன்றும் புரியாமல் அண்ணாமலை மீண்டும் போட முயன்றபோதும், கையெடுத்துக் கும்பிட்ட அவர், அந்தப் பதக்கத்தைக் கையில் வாங்கிக் கொண்டார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அண்ணாமலை பதக்கத்தை கழுத்தில் அணிவிக்க முயன்றபோதும், சூரியராஜபாலு சிரித்தபடியே “இல்லை, இல்லை, கையில் கொடுங்கள்” என கேட்டு வாங்கிக் கொண்டார். பின்னர் புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜாவின் மகனின் செயலை முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அண்ணாமலை கூறுகையில், “யார் கையால் பதக்கம் வாங்க வேண்டும் என நினைப்பது அவரவர் விருப்பம்.
என் கையில் பதக்கம் வாங்கவில்லை, வாங்க மறுத்துவிட்டார் என்பது முக்கியமில்லை. டி.ஆர்.பி.ராஜாவின் மகன் எங்கிருந்தாலும் சிறப்பாக இருக்க வேண்டும். இந்தத் துறையில் சாதிக்க வேண்டும். பெரிய மனிதனாக வளர வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்” என அண்ணாமலை தெரிவித்திருந்தார். இதேபோல், அண்மையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 32-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது ஜீன் ராஜன் என்ற மாணவி ஆளுநர் ரவியிடம் பட்டம் பெற மறுத்தார். துணைவேந்தர் சந்திரசேகரிடம் தனது பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். விசாரணையில் ஜீன் ராஜனின் கணவர் தி.மு.க நிர்வாகி எனத் தெரியவந்தது.