2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாகும் ‘ஜனநாயகனுக்கு’ சவால்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
‘தலைவா’ படத்திற்கு ‘புரட்சித் தலைவி’ கொடுத்த நெருக்கடியை விஜய் மறந்துவிட்டார். ஜனநாயகன் படம் ரிலீசாவது அவ்வளவு எளிதல்ல என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.
இது பற்றி கோலிவுட் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம்.
‘‘சார், மதுரை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை, த.வெ.க., தலைவர் விஜய், ‘அங்கிள்’ என வார்த்தைக்கு வார்த்தை கூறி கிண்டல் செய்து பேசினார். அவரது கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்திலும் ஆளுங்கட்சியை தாக்கி பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது என தகவல் வெளியாகி இருக்கும் சூழ்நிலையில், படத்தை வெளியிட வினியோகஸ்தரர்கள், திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதாக தகவல் பரவி உள்ளது.
ஆகஸ்ட் 21ல் மதுரை பாரபத்தியில் 2வது மாநில மாநாட்டை நடத்தினார். அதில் பேசிய விஜய், தி.மு.க., அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதல்வர் ஸ்டாலினை வார்த்தைக்கு வார்த்தை ‘அங்கிள், வாட் அங்கிள், ராங் அங்கிள்’ எனக்கூறி ‘கலாய்த்தார்’. இதற்கு பதிலடி தந்து விஜயை வளர்த்துவிட வேண்டாம் என தி.மு.க., அமைதி காத்து வருகிறது.
வெளியாவதில் சிக்கல் விஜயின் கடைசி படமான ஜனநாயகன், வரும் 2026 ஜன., 9ல் வெளியாக உள்ளது. படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பட ‘புரமோஷன்’ போஸ்டரில் தொண்டர்கள் பின்னணியில் விஜய் நிற்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தேர்தல் நேரத்தில் இப்படம் வெளியாவதால், அதில் தி.மு.க., அரசுக்கு எதிராக விஜய் ‘பஞ்ச்’ டயலாக் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதல்வரையும், துணை முதல்வர் உதயநிதியையும் தாக்கி வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், படப்பிடிப்பில் இருப்போர் கூறுகின்றனர்.
கடந்த 2013ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது, விஜயின் ‘தலைவா’ படம் வெளியாக நாள் குறிக்கப்பட்டது. படத்தின் தலைப்புக்கு கீழே ‘டைம் டு லீடு’ என எழுதி இருந்தனர். இது ஜெயலலிதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால், அப்படத்தை வெளியிட அரசு தரப்பில் அனுமதி கொடுக்கவில்லை. படத்தை, தியேட்டர் உரிமையாளர்கள் சொந்த பாதுகாப்பில் வெளியிட்டுக் கொள்ளலாம். தியேட்டரில் ஏதும் பிரச்னை ஏற்பட்டால், தமிழக அரசு பொறுப்பேற்காது என்றும் வெளிப்படையாக கூறினர். மேலும் சில வகைகளில் படத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, அப்போது கோடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஜெயலலிதாவை விஜய், மற்றும் படத்தின் இயக்குநர் ஆகியோர் சந்திக்கச் சென்றனர். அப்பாயின்மென்ட் இல்லாமல் யாரையும் பார்க்க முடியாது என சொல்லி, ஜெயலலிதா திருப்பி அனுப்பி விட்டார். படத்தலைப்புக்கு கீழே இருந்த வாசகம் நீக்கப்பட்ட பிறகு, ஜெயலலிதாவை புகழந்து விஜய் அறிக்கை விட்டபிறகுதான் படம் ரிலீசானது. அன்று பட்டும் இன்று திருந்தவில்லையே?’’ என்றனர்.