கடந்த ஆகஸ்ட் 21ம் தேதித.வெ.க.வின் இரண்டாவது அரசியல் மாநாடு மதுரையில் நடந்தது. இந்த மாநாடு தொடர்பாக த.வெ.க. மீது பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தமிழக முதல்வருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
விஜய்யின் அரசியல் மாநாட்டிற்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என விஜய் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் அவரது உத்தரவை மதிக்காமல் நிறைய பேர் கைக்குழந்தையுடன் மாநாட்டுக்கு வந்தனர். வெயிலின் கொடுமை தாங்காமல் குழந்தைகள் கதறி அழுத நிலையில் தடுப்புக் கம்பிகளைத் தாண்டி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வெளியே வந்து ஆசுவாசப்படுத்தினர்.
மதியம் 3:15 மணிக்கு மாநாடு துவங்கிய நிலையில், காலை 6:00 மணி முதலே தொண்டர்கள் குவிந்தனர். காலை 10:00 மணிக்கு மேல் கொளுத்தும் வெயிலுடன் சூறைக்காற்றும் சேர்ந்து தொண்டர்களை பந்தாடியது.
மாநாடு நடந்த 500 ஏக்கர் பரப்பளவில் ஒரு மரம் கூட இல்லாததால், வெயிலின் தாக்கத்தால் தொண்டர்கள் 17 பேர் மயக்கம் அடைந்தனர். அருகிலுள்ள 3 மருத்துவமனைகளுக்கு இவர்கள் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். 250 பேருக்கு திடலில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெயிலில் தவித்த தொண்டர்களின் மேல் ட்ரோன் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் தரையில் விரித்திருந்த பச்சை துணியை எடுத்து தலைக்கு மேலாக பிடித்த படி நின்றனர். மாநாடு நடந்த பாரப்பத்தி பகுதியில் அதிகபட்சமாக 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.
இது தொடர்பாக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், ‘‘அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகளில் கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் பாதுகாப்பற்ற சூழலுக்கு ஆளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. மதுரையில் நடந்த த.வெ.க. மாநாட்டில் ஆறுமாதம் கைக்குழந்தை மற்றும் குழந்தைகளை தூக்கி வந்து மாநாட்டில் கலந்துகொண்டனர்.
த.வெ.க. வினர் பிரிவு 21, 39(இ) மற்றும் 39(எஃப்) அரசியல் அமைப்பு விதிகள் மீறப்பட்டுள்ளது. சிறார் நீதி மற்றும் குழந்தைகள் பராரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2012 உள்ளிட்ட சட்டங்கள் மீறப்பட்டுள்ளன.
எனவே, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், டி.ஜி.பி. ஆகியோர் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு குழந்தைகளை தூக்கி வருவதை தடுக்க, மாநிலம் தழுவிய வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும்.
அரசியல் நிகழ்வுகளில் 12 வயதுக்கும் குறைந்த குழந்தைகள் பங்கேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும்.இது தொடர்பான அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போதே, இதற்கான உறுதிமொழி பத்திரங்களை சமர்பிக்கும் வகையிலான விதிமுறைகளை ஏற்படுத்தவேண்டும். எனவே, விதிகளை மீறிய த.வெ.க. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறியிருக்கிறார்