சென்னை அடுத்த வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் இயங்கி வரும் வி.ஐ.டி., பல்கலைக்கழகம் துவங்கப்பட்டு 15 ஆண்டு கள் நிறைவடைந்த நிலையில், அங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பல்கலை வேந்தர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்; துணைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்; இணை துணைவேந்தர் தியாகராஜன் வரவேற்றார்.
தொழிலில் தோல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்யசபா உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசன் எம்.பி., பேசியதாவது:
‘‘நாடு சுதந்திரம் பெற்ற பின், அனைத்து விஷயங்களிலும் நாம் வெற்றி அடைந்து விட்டோமா? நாட்டில், ஜாதி, மத வேறுபாடுகளை களைவதில் நாம் தோல்வி அடைந்துள்ளோம்.நானும், என் தொழிலில் தோல்வி அடைந்திருக்கிறேன். அதை ஒப்புக்கொள்வதில் தயக்கம் இல்லை. ஆனால், ஒவ்வொரு தோல்வியிலும், புதிய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
வி.ஐ.டி., பல்கலையில் பயின்ற மாணவர்கள், உலகின் பல நாடுகளில் பணியாற்றி, இந்தியாவுக்கும், இந்த கல்வி நிலையத்திற்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்கள், தோல்விகளை இறக்கி வைத்து, வெற்றியை சுமந்தவர்களாக உள்ளனர். திமிரோ, வீரமோ, வணக்கத்திற்கு உரியது அல்ல; நம் தாய்மொழி தான் வணக்கத்திற்கு உரியது. வீரத்தின் உச்சமே, அஹிம்சை.
நாத்திகம் என்ற வார்த்தையை, ஆத்திகம் தான் தந்தது. நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன். பகுத்தறிவு என்பது, அறிவு சார்ந்தது’’ இவ்வாறு பேசிய கமல், பின், மாணவர் களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.