தமிழகத்தல் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் விவகாரம், தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சி ரிப்போர்ட்டை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்திவந்த தூய்மைப் பணியாளர்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களும் ஆகஸ்ட் 13ஆம் தேதி நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமையன்று தடைவிதித்ததோடு, அவர்களை அந்த இடத்திலிருந்து அகற்றவும் உத்தரவிட்டது. இதற்குப் பிறகு மாலை ஐந்து மணியளவில் பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் ரிப்பன் மாளிகை பகுதியில் குவிக்கப்பட்டனர்.
ரிப்பன் மாளிகைக்கு எதிரான சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால், போராட்டக்காரர்கள் எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டது.
ஆனால், அவர்கள் கைதுசெய்யப்படவில்லை. இதற்குப் பிறகு நள்ளிரவில் சுமார் 11.30 மணியளவில் காவல்துறை போராட்டக்காரர்களை கைதுசெய்யத் துவங்கியது.
இதனை அவர்கள் எதிர்த்தபோதும், அனைவரும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.
சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் இதுபோல கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களிலும் சமூக நலக் கூடங்களிலும் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக, காவல்துறையும் மாநகராட்சியும் போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் இதனை மறுத்துவிட்டனர். இதற்கிடையில், தொழிலாளர்களுடன் நடந்த மற்றொரு பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதையடுத்து, நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அரசுக்கு அரசியல் ரீதியாக பிரச்சனையாக மாறிவரும் இந்த விவகாரம் குறித்துப் பேசினார்.
இந்த விவகாரம் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என உளவுத்துறை முதல்வருக்கு அறிக்கை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக நாம் விசாரித்தபோது, ‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமை துப்புரவு பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என உறுதி அளித்தது. ஆனால், ‘நாங்கள் எங்கே வாக்குறுதி அளித்தோம்!’ என்ற தொணியில் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
தவிர, துப்புரவு பணியாளர்களையும், பத்திரிகையாளர்களையும் சேகர் பாபு அணுகிய விதம் சரியில்லை என்றும், துப்புரவு பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை தமிழக மக்கள் விரும்பவில்லை. ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்’’ என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில்தால் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளே இந்த விவகாரத்திற்கு கண்டம் தெரிவித்திருக்கிறது. தவிர, “தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
