ஆகஸ்ட் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி திருச்சி வரவிருக்கையில், ‘திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் ஜெ.சீனிவாசன் என்னை அடியாட்களை வைத்து மிரட்டுகிறார்’ என வட்டச் செயலாளர் ஒருவர் தலைமைக்கு புகார் அனுப்பியிருப்பதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாநகர் மா.செ. வை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையோடு வட்டச் செயலாளர்கள் பலர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிமுக முன்னாள் பகுதி செயலாளரை ஜாதி ரீதியாக திட்டியதாக அளித்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில்தான், ‘என்னை அடியாட்களை வைத்து மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தாக்க முயற்சிக்கிறார்’ என எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சி மாநகர 18 வது வட்டக் கழகச் செயலாளர் பி.ஜெயக்குமார் பரபரப்பான குற்றச்சாட்டுடன் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக திருச்சி மாநகர 18வது வட்டக் கழகச் செயலாளர் பி.ஜெயக்குமார் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில், ‘‘நான் 33 வருடங்களாக கட்சிப் பணியாற்றி வருகிறேன். இலக்கிய அணி, மாவட்ட துணைச் செயலாளர்6 முறை என தற்போது வட்டச் செயலாளராக இருந்து வருகிறேன்.
கட்சிக்காக நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என அனைத்திலும் கலந்துகொண்டு கட்சிப் பணிக்காக பாடுபட்டிருக்கிறார். இந்த நிலையில்தான் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் ஜெ. சீனிவாசன் என்னை அடியாட்களை வைத்து அடிக்கச் சொல்லியிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் எனக்கே இந்த நிலைமை என்றால் கடைக்கோடி தொண்டனின் நிலையை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எனவே, திருச்சி மாநகர மா.செ. சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என எழுதியிருக்கிறார்.
இந்தக் கடிதம்தான் திருச்சி அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
