பா.ஜ.க. மீது கடும் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு டி.டி.வி.தினகரன் மூலம் தூது விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

அண்மையில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்திக்க நேரம் கேட்டும் அனுமதி கிடைக்காத ஆதங்கத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், பா.ஜ.க.விற்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஒரே நாளில் இரண்டு முறை சந்தித்தார் ஓ.பி.எஸ்.!

இதனைத் தொடர்ந்து பாஜக தரப்பில் ஓபிஎஸ் தரப்பை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடந்தன. இதற்காக சென்னை வந்த தேசிய அமைப்புச் செயலாளர் பிஎல் சந்தோஷை சந்திக்க வைக்க ஓபிஎஸ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிஎல் சந்தோஷ் சென்னை வரும் வரை, ஓபிஎஸ் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்துவிட்டு முடிவை கூறுவதாக ஓபிஎஸ் கூறி இருந்தார்.

இதன்பின் சென்னை வந்த பிஎல் சந்தோஷ், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் தேனியில் முகாமிட்டுள்ள ஓபிஎஸ், பிஎல் சந்தோஷை சந்திக்க சென்னைக்கு வரவில்லை. இதனால் பாஜக மேலிடம் அப்செட்டாகி இருக்கிறது. ஏனென்றால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி அமைத்திருந்தது, பாஜகவுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்தது.

தென் மாவட்டங்களில் இத்தனை ஆண்டுகளாக பாஜகவுக்கு இல்லாத அளவிற்கு வளர்ச்சியை எட்டியது. மதுரை, ராமநாதபுரம், தேனி, நெல்லை, கன்னியாகுமரி என்று 5 தொகுதிகளில் பாஜக 2வது இடத்திற்கு முன்னேறியது. இதற்கு முக்குலத்தோர் சமூகத்தின் ஆதரவு இருந்ததே காரணம். இதன் காரணமாகவே முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் தலைவராக கொண்டு வரப்பட்டார்.

மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளை சட்டசபைத் தேர்தலிலும் அறுவடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. ஆனால் திடீரென ஓபிஎஸ் விலகி இருப்பது பாஜகவுக்கு சில பின்னடைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து பாஜக கூட்டணியில் இருந்ததால் மட்டுமே, முக்குலத்தோர் சமூக வாக்குகள் கிடைத்தது. தற்போது டிடிவி தினகரன் மட்டும் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.

இதனால் ஓபிஎஸ் தரப்பை மீண்டும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பாஜக மேலிடம் தரப்பில் டிடிவி தினகரன் மூலமாக ஓபிஎஸிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், டிசம்பருக்கு பின் என்ன செய்யலாம் என்று ஓபிஎஸ் தரப்பில் முடிவு எடுக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

ஆனால் ஓபிஎஸ் முன்பாக 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. தனிக்கட்சி தொடங்கி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது திமுக அல்லது தவெக உடன் கூட்டணி அமைப்பது மட்டுமே வாய்ப்பாக இருக்கின்றன. இல்லையென்றால் மீண்டும் பாஜக கூட்டணிக்கே செல்வது மட்டுமே ஒரே வழி. இதனால் ஓபிஎஸ் முடிவு என்னவாகும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal