மறைந்த தலைவர்கள் பற்றி இருக்கும் போது விமர்சனத்தையும், மறைந்த பிறகு அவர்களது பெருமையையும் பேசுவது வழக்கம். ஆனால், திருச்சி சிவா காமராஜர் குறித்து சர்ச்சையாக பேசியிருப்பதுதான் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
‘‘ காமராஜர் சாகும்போது, கருணாநிதியின் கையை பிடித்து, நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்’’ என கூறியதாக திமுக எம்.பி., திருச்சி சிவா பேசியது சர்ச்சையாகியுள்ளது.
சென்னை பெரம்பூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவா பங்கேற்றார். கடந்த 15ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் என்பதால் அது தொடர்பாகவும் பேசினார் சிவா. அவர் பேசியதாவது: ‘‘கருணாநிதி என் 23, 24 வயதின்போது என்னை காரில் அழைத்து செல்வார். அப்போது என்னிடம் பழைய நிகழ்வுகளை சொல்வார். சிலர் சின்னப்பையனிடம் எதற்கு இதெல்லாம் சொல்கிறார் என நினைப்பார்கள். ஆனால், அதனை நான் மேடையில் சொல்வேன் என கருணாநிதிக்கு தெரியும்.
அப்படி ஒருநாள் மின்சார தட்டுப்பாடு குறித்து தமிழகம் முழுவதும் காமராஜர் கண்டன கூட்டம் போடுகிறார். காமராஜருக்கு ‘ஏசி’ இல்லையெனில் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கருணாநிதி கூறினார். தன்னை எதிர்த்து பேசினாலும், அவரது உடல்நிலையை கருதி நான் உத்தரவிட்டேன் என்றும் கருணாநிதி கூறினார்.
அதேபோல், எமர்ஜென்சி காலத்தில் அவரை கைது செய்ய துடித்தார்கள். தமிழகத்தில் அது முடியவில்லை. அந்த சமயத்தில் திருப்பதிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக செல்கிறார். அப்போது முதல்வர் அலுவலகத்தில் இருந்து ‘தயவு செய்து நீங்கள் திருப்பதி செல்ல வேண்டாம்’ என தகவல் போகிறது. இதற்கு, ‘நான் திமுக.,காரன் இல்லை, காங்கிரஸ்காரன். என்னை போக வேண்டாம் என சொல்ல இவர் யார்’ என்றார் காமராஜர். அதற்கு பதிலளித்த கருணாநிதி, ‘நான் திமுக தலைவர் அல்ல, தமிழகத்தின் முதல்வர். இது என் உத்தரவு’ என்றார்.
‘நான் நாற்காலியே வேண்டாம் என சொல்லிவிட்டு வந்தவன். எனக்கு உத்தரவு போட இவர் யார், இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா’ எனக் கேட்டார். உடனே ராஜாராம் நாயுடுவை கூப்பிட்ட கருணாநிதி, ‘அவரை புரிந்து கொள்ள சொல்லுங்கள். அவருக்கு உத்தரவுபோடும் அளவிற்கு நான் பெரியவன் இல்லை. ஆனால், அவரை கைது செய்ய மத்திய அரசு துடித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்திற்குள் இருக்கும் வரை நான் பாதுகாப்பேன். அதைத்தாண்டி, ஆந்திராவின் திருப்பதி சென்றால் என்னால் காப்பாற்ற முடியாது. எனவே தயவு போக வேண்டாம் என சொல்லுங்கள்’ என்றார்.
அதன்பிறகே புரிந்துகொண்ட காமராஜர், இவ்வளவு பெரிய உள்ளமா அவருக்கு எனக்கூறி, கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு உயிர் போவதற்கு முன்பு, ”நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும்” என்றாராம். இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.
‘‘வைரவா அந்த விளக்கை அணை’’ என்று உதவியாளரிடம் கூறி விட்டு படுக்க சென்ற காமராஜரின் உயிர் பிரிந்தது என்பதே பலரும் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனால், உயிர் பிரியும்போது கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு, நாட்டை காப்பாற்றுங்கள் எனப் பேசியதாக ‘புது’ தகவலை திருச்சி சிவா கூறியது சர்ச்சையாகியுள்ளது.
ஏற்கனவே ஆட்சியில் பங்குகேட்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, திருச்சி சிவாவின் பேச்சால் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க. & காங்கிரஸ் கூட்டணியில் கல் எறிந்துவிட்டார் சிவா என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
