சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் ஏற்று கொள்ளப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என 2017ல் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார்.
சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜே.ஸ்ரீதேவி முன் நடந்து வருகிறது. இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், மனு மீது, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
‘‘சசிகலா பொதுசெயலாளராக ஒரு கூட்டத்தையும் கூட்டாதது கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது. சசிகலாவை நீக்கியது செல்லும். இது தொடர்பாக அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் எடுத்த தீர்மானமும் செல்லும்’’ என்றும் நீதிபதி ஸ்ரீ தேவி உத்தரவிட்டுள்ளார்.
மீண்டும் அதிமுகவுக்குள் நுழைய சசிகலா, பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார். இந்நிலையில் ஐகோர்ட்டின் உத்தரவால், மீண்டும் கட்சிக்குள் சசிகலா நுழையும் வாய்ப்பு குறைந்துவிட்டது. இது, எடப்பாடி தரப்பிற்கு சந்தோஷத்தையும், சசிகலா தரப்பிற்கு கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையில் நாமக்கல்லில் சசிகலா கூறும்போது, ‘ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யப்படும்’ என்றார்.
