நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தில் போட்டியிட்டு, ஓரளவிற்கு வெற்றி பெற்றனர்.

நடந்து முடிந்த மாநகராட்சித் தேர்தலில் சொல்லிக்கொள்ளும்படியாக யாரும் வெற்றி பெறவில்லை. காரணம், ‘விட்டவின்’கள் விளையாண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில்தான் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா சமயத்திலேயே விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படமும் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனால் பீஸ்ட் பற்றிய தகவல்கள் தான் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்பே விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் பீஸ்ட் பட அப்டேட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், மதுரை விஜய் மக்கள் இயக்க ரசிகர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி போஸ்டர் ஒட்டி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. அந்த போஸ்டரில், விஜய் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்க, ‘முடிவெடுத்தால் முதல்வர்’ தான். 2021 ல் தளபதி (மு.க.ஸ்டாலின்), 2026 ல் தளபதி (விஜய்). 2026ல் தளபதி மக்கள் இயக்க முதல்வர் வேட்பாளர் என விஜய்யின் போட்டோவிற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரின் மற்றொரு புறத்தில், 2026 அரசியல் ஆலோசகர், தளபதி மக்கள் இயக்கம், தமிழ்நாடு என பிரசாந்த் கிஷோரின் போட்டோவும் போடப்பட்டுள்ளது. விஜய், பிரசாந்த் கிஷோரை சந்தித்தது பிரச்சனையாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், விஜய் போஸ்டரில் பிரசாந்த் கிஷோரின் போட்டோ இடம்பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுவும் முடிவெடுத்தால் முதல்வர் தான் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது தமிழக அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal