மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு, தமிழக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மெத்தனப்போக்கோடு செயல்படுவது தமிழக மக்கள் நலன் காக்க உதவாது என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
‘‘கர்நாடக காங்கிரஸ் மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து பிரச்சினை செய்து வரும் வேளையில் தமிழக அரசு, தமிழக காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் மெத்தனப்போக்கோடு செயல்படுவது தமிழக மக்கள் நலன் காக்க உதவாது.
குறிப்பாக மேகதாது அணையின் நீரானது தமிழக விவசாயிகளின் பயிர்ப்பிரச்சினை மற்றும் தமிழக மக்களின் குடிநீர் பிரச்சினை மட்டுமல்ல விவசாயிகளின், பொதுமக்களின் உயிர்ப்பிரச்சினை என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்து இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் கர்நாடகா காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும்’’இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
