உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருமகளும் ஒரே வார்டில் களமிறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் தேர்தலை சந்திக்கிறது. முதல் மேயர் பதவியை பிடிக்க தி.மு.க., அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாகர்கோவில் மாநகராட்சியில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து கள மிறங்குகிறது. வார்டு ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது.

அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி தனித்தனியாக களமிறங்குகிறது. அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 50 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி 11-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா வேட்பாளராக கள மிறக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா தலைமை நேற்று இரவு வெளியிட்டது. இதில் 26 வார்டுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 11-வது வார்டில் திவ்யா சிவராம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 11-வது வார்டு வேட்பாளராக களமிறக்கப்பட்டு உள்ள திவ்யா சிவராம் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மருமகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ஸ்ரீலிஜாவின் நாத்தனாரும் ஆவார். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருமகளும் ஒரே வார்டில் களமிறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal