இன்றைய தினம் அ.தி.மு.க. & பா.ஜ.க. இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாளை அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி உடன்பாடு முடிவுக்கு வந்து வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, வைத்திலிங்கம், வேலுமணி ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். பா.ஜ.க., சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறும்போது, ‘‘சட்டசபையிலும், மக்கள் மன்றத்திலும் அ.தி.மு.க., தலைமையில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுகிறோம். வேட்பு மனு தாக்கல் செய்ய 4ம் தேதி வரை அவகாசம் உள்ளது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. எந்த சிக்கலும் இல்லை. பேச்சுவார்த்தையை தொடர்வோம். நல்லபடியாக பேச்சுவார்த்தை நடக்கிறது. சில இடங்களில் பா.ஜ., வலிமையாக உள்ளது. கடந்த முறை நடந்த தேர்தலில் சில இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். வலிமையாக உள்ள இடங்களை ஒதுக்க வேண்டும் என அ.தி.மு.க.,விடம் வலியுறுத்தி உள்ளோம். கவர்னர் குறித்து திமுக கட்சி பத்திரிகையில் எழுதியது அவதூறு. கவர்னர் , அவரது கடமையை செய்கிறார். இந்தகட்டுரைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்’’ எனக்கூறினார்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, ‘‘ பா.ஜ.,வுடன் பேச்சுவார்த்தை 4: 30 மணி நேரம் நடந்தது. சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்தது. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு பா.ஜ.,விற்கு இடங்கள் ஒதுக்கப்படும். அதிமுக நலன் பாதிக்காத வகையில் முடிவு எடுக்கப்படும்’’ இவ்வாறு அவர் கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal