நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதே போல் அ.தி.மு.க. & பா.ஜ.க. இடையே இன்று மாலை கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனையின் போது பா.ஜனதாவுடன் கூட்டணியை தொடர்வது, இடபங்கீடு செய்து கொள்வது பற்றி விவாதித்தனர்.

சென்னையில் உள்ள 8 மாவட்ட செயலாளர்களையும் தங்கள் பகுதியில் உள்ள வார்டுகளில் போட்டியிட விரும்புவர்களின் பட்டியலுடன் வரும்படி அழைத்துள்ளனர். அப்போது சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

தமிழக பா.ஜனதாவிலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இன்று காலை ஆலோசனை நடந்தது. மாவட்ட தலைவர்கள் 60 பேருடன் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். தனித்து போட்டியிட வேண்டும் என்று சில மாவட்ட நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதே சிறந்தது என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதா தலைவர்கள் இன்று மாலை அல்லது நாளை காலை சந்தித்து பேசுவார்கள். அப்போது இடப்பங்கீடு முடிவாகும் என்று கூறப்படுகிறது.

அதே போல் தேர்தலை தனியே சந்திக்கப்போகும் பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இன்று மாலை 6 மணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சித்தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் பா.ம.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். அப்போது பா.ம.க. எங்கெங்கு போட்டியிட வேண்டும்? போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று ஆலோசனை நடத்துகிறார்கள்.

இந்ததேர்தலை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, தே.மு.தி.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்பட 7 கூட்டணிகள் தேர்தலை சந்திக்கின்றன.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal