“முதல்வர் விஜய் 3 கோப்புகள் கையில் இருக்கிறது என்று கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி பேசுவது திசைதிருப்பும் தந்திரம்.தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு மாநிலச் செயலர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தவெக தலைமையில் கூட்டணி மற்றும் அதற்கான செயல்திட்டம் உருவாக்குவது, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்க நாளை (செப். 9) நடைபெறும் தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால், தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.
தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும். தமிழக மக்களின் நலன் கருதி, உழைப்பாளர்களின் நலன் கருதி அரசுக்கு ஆலோசனைகளை வழங்குவோம். ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்கள் விருப்பம். சட்டமன்றம் என்பது சண்டை மன்றமாக இருக்கிறது. அவை முறையாக நடப்பதில் ஆளும்கட்சியைப் போல் எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு இருக்கிறது என்றாலும் ஆளும் கட்சிக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. மக்களுடைய வரிப்பணத்தில் சட்டப்பேரவை நடக்கிறது. அதை விரயம் செய்யக்கூடாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சிகள் பேரவையில் கேட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்காவது முதல்வர் பதில் சொன்னாரா?. அவர் முறையாக பதில் சொல்லவைல்லை. இதுவரை இதுபோன்று நடக்கவில்லை. பேரவையில் நினைத்ததை எல்லாம் முதல்வர் பேசுகிறார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்களைவிட இங்கு ஊழலை எதிர்த்து போராடிய வேறு கட்சியை சொல்லுங்கள் பார்க்கலாம்.
இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் மிசாவில் கைதானவர்கள் சிறையில் பட்ட கஷ்டங்கள், வன்கொடுமைகள் பற்றி இருக்கிறது. தவெக அமைச்சர்கள் முதலில் ‘மிசா’ பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும். மிசா கொடுமைகள் தொடர்பாக நிறைய ஆவணங்களும் இருக்கின்றன. மேலும், மிசாவில் கைதானவர்கள் சமூக விரோதிகள் என்று நிர்மல் குமார் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. அதேபோல் சர்க்காரியா கமிஷனில் யார் மீதும் வழக்கு போடவில்லை. தவெக அரசுக்கு ஆதரவு என்பது அவர்கள் நிலைப்பாட்டைப் பொருத்ததே.
முதல்வர் 3 கோப்புகள் கையில் இருக்கிறது எனக் கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? அதைவிடுத்து 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி ஏன் பேசுகிறார். இது திசைதிருப்பும் தந்திரம்” என்று பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்தார்.
