தமிழ்நாட்டிற்கு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு தமிழக அரசு 4 இடங்களை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் விஜய், “புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கி வந்தாலும், தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலக தரத்திலான பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பது இன்றியமையாதது. புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும்.

தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வர வசதிகள் மற்றும் பசுமை கட்டிட தர நிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். அவற்றின் பாரம்பரிய மதிப்பை வருங்கால தலைமுறைகளுக்கும் அறியும் வகையில் உருவாக்கப்படும். இவற்றை கருத்தில் கொண்டு அடுத்த நூற்றாண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 லட்சத்து சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்” என்று அறிவித்தார்.

இதற்கிடையே, புதிய கட்டிடத்துக்கு 20 லட்சத்து சதுர அடி பரப்பளவு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு போதுமான இடம், போக்குவரத்து வசதி, சுற்றுச்சூழல் மற்றும் சட்ட பிரச்சினைகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புதிய தலைமைச் செயலகத்துக்காக சென்னையின் முக்கியமான பகுதிகளில் 4 இடங்களை தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

முதலாவதாக பட்டினப்பாக்கம் தமிழக அரசின் விருப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பட்டினப்பாக்கம் போர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 ஏக்கர் நிலம் இருப்பதும் அது நகரின் முக்கிய பகுதியில் இருப்பதும் அரசின் தேர்வில் முதன்மையாக இருக்க காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் இது கடலோர பகுதி என்பதால் கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகள் இருப்பது சற்றே சிக்கலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இரண்டாவதாக கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையம். இந்த ஆராய்ச்சி வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம் இருக்கிறது. கிண்டியிலேயே ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் பெரிய அளவில் நிலம் இருப்பதாலும் நகரின் மையத்தில் இருப்பதாலும் இந்தப் பகுதியும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக நந்தம்பாக்கத்தில் 20 ஏக்கருக்கு அதிகமான நிலம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இடத்திற்கு பிளஸ் விமான நிலையம் அருகில் இருப்பது, மேலும் தென் சென்னை மற்றும் மேற்கு சென்னைக்கு அருகில் இருப்பது. இதனால் எளிதாக மக்கள் வந்து செல்ல முடியும் என்பதால் இந்த இடமும் அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

நான்காவதாக கோயம்பேடு பழைய பேருந்து நிலைய பகுதி. 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பகுதியில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட வசதிகளுடன் உள்ளது. இவை சாதகங்களாக பார்க்கப்படுகிறது. இந்த 4 இடங்களிலும் உள்ள சாதக பாதக அம்சங்களை கருத்தில் கொண்டு அரசு புதிய கட்டிடத்துக்கு தேவையான இடம் தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த 4 இடங்கள் இல்லாமல் கூடுதல் இடங்களும் அரசின் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது சென்னைக்கு அருகாமையில் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் ரோடு ஆகிய பகுதிகளிலும் இடங்களை தேர்வு செய்யும் தீவிர பணியில் அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal