தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், எதிர்வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2026-27ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையின் வரைவை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்று வழிபாடு நடத்திய நிகழ்வு, சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.
பட்ஜெட் என்பது அரசு ஆவணமாகும். வரும் நிதியாண்டில் மக்கள் வரிப்பணம் எப்படி செலவிடப் போகிறது? வருவாய் வரவினங்கள் என்ன என்பதை அறிக்கையாக ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 202-வது பிரிவின் படி, மாநிலத்தின் “ஆளுநர், ஒவ்வொரு நிதியாண்டைப் பொருத்தும், அந்த ஆண்டிற்கான மாநில வரவு செலவீனங்களை மதிப்பீட்டு விவர அறிக்கை ஒன்றை மாநில சட்டமன்றப் பேரவை அவையின் முன்பு வைக்குமாறு செய்திட வேண்டும். இந்த விவர அறிக்கையே நிதி நிலை அறிக்கை அல்லது பட்ஜெட் எனக் குறிப்பிடப்படுகிறது.
202-வது பிரிவின் படி, நிதிநிலை அறிக்கையை அவைமுன் வைக்க வேண்டிய கட்டாய பொறுப்பு கடமை ஆளுநருக்கு உரியது. பொதுவாக, ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்ட பின், அவையின் முன்பு வைக்கும் வரை, அந்த ஆவணம் தலைமைச் செயலகத்தை விட்டு வெளியிலோ, அல்லது வேறு நபர்களின் பார்வைக்கோ செல்லக் கூடாது என்பது பல ஆண்டுகளாகப் பின்பற்றப்படும் மரபாகும்.
மேலும், ஒரு மாநிலத்தின் வரவு, செலவு மற்றும் புதிய திட்டங்களை முதலில் அறிந்துகொள்ளும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற அவைக்கே உண்டு.அமைச்சரின் இந்த செயலையே சபை உரிமை மீறலாக தெரிவித்துள்ளது அஇஅதிமுக தனது ட்விட்டர் பாக்கத்தில், பட்ஜெட் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கோப்புகள் சட்டமன்றத்தில் வைப்பதற்கு முன்பு எந்த பொதுவெளியிலும் வைக்கக் கூடாது.
ஆனால், சட்டமன்றத்தில் இதுவரை தாக்கல் செய்யப்படாத நிதிநிலை அறிக்கையை எடுத்து, தமிழக மாநில எல்லைக்கு வெளியே கொண்டு சென்று, திருப்பதியில் வைத்து பூஜை செய்துள்ளார் தவெக அரசின் வேளாண்துறை அமைச்சர்! பூஜை செய்யும் பொருட்டு அமைச்சரிடம் இருந்து நிதிநிலை அறிக்கை கைமாறி இருக்கும் என்பது, சட்டப்படி குற்றம் இல்லையா? ரகசிய காப்பு பிரமாணத்திற்கும், சட்டமன்ற விதிகளுக்கும் முற்றிலும் எதிரான ஒரு குற்றத்தைச் செய்துள்ள அமைச்சர் மீது அரசும் சபாநாயகரும் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் கையேட்டின் விதிகள் 138 மற்றும் 139-ன் படி, பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபடும் அனைவரும் ஆவணம் தாக்கல் செய்யப்படும் வரை அதன் ரகசியத்தன்மையை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும். எவரொருவரிடம் பட்ஜெட் தொடர்பான தகலவை பகிர்ந்துகொள்ளக் கூடாது. பட்ஜெட் தகவலை வெளியே கசியவிட்டால் விதி 140-ன் படி ‘அரசுப் பணியிலிருந்து தவறிய குற்றமாக’ கருதப்படும்.
மேலும், விதி 141-ன்படி இது 1923-ஆம் ஆண்டின் அதிகாரபூர்வ ரகசியக் காப்புச் சட்டத்தின் கீழ் கிரிமினல் அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகக்கூடிய விதிமீறலாகும். இந்த விதிகள் பட்ஜெட் ஆவணத்தின் ரகசியத்தன்மையை பேணுவதோடு மட்டுமல்லாமல், அதன் பாதுகாப்பான கட்டுப்பாட்டையும் வலியுறுத்துகின்றன.
இருப்பினும், வரைவு ஆவணத்தைக் கடவுளின் ஆசி பெறுவதற்காகக் கோயிலுக்கு எடுத்துச் செல்வது என்பது தகவல் கசிவாகா கொள்ளப்படுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக ஆட்சிக்காலத்தில், நிதியமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் கோப்புகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் எடுத்துச் சென்று ஆசி பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அன்றைய காலகட்டத்தில், அது எவ்வாறு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பபட்டதோ கேள்விக்கு உட்படுத்தப்பட்டதோ அதையே தற்போதைய அமைச்சரின் செயலுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்ற்னர்.
மேலும், இந்தாண்டு வேளாண் பட்ஜெட் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. கர்நாடக நீர் விவகாரத்தால் டெல்டா விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே நிலவி வருகிறது. இவ்வளவு நெருக்கடியான அரசியல் சூழலுக்கு மத்தியில், பட்ஜெட் வரைவு மாநில எல்லையைத் தாண்டிச் சென்றதே தற்போதைய பதற்றத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
மேலும், அரசமைப்புச் சட்ட விதிகளைச் சுட்டிக்காட்டி சமூக ஆர்வலர்கள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த நிகழ்வு குறித்து அமைச்சர் வினோத் தரப்பிலிருந்தோ அல்லது வேளாண்மைத் துறை அதிகாரப்பூர்வமாகவோ இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
