மறைந்த முதல்வர் கலைஞருக்கு ‘மனசாட்சி’யாக டெல்லியில் விளங்கியவர்தான் முரசொலிமாறன். தமிழகத்தில் ஆட்சி புரிபவர்களுக்கு தனக்கு மிகுந்த நம்பிக்கை நட்சத்திரமாகவும், மனசாட்சியாகவும் டெல்லியில் செயல்படக்கூடிய நபர் ஒருவர் அவசியம்!
அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மு.தம்பிதுரை, மைத்ரேயன் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள். ஸ்டாலினுக்கு டி.ஆர்.பாலு, மருகன் சபரீசன் ஆகியோர் செயல்பட்டார்கள். அந்த வகையில் தமிழக முதல்வராகியிருக்கும் த.வெ.க. தலைவர் விஜய்க்கு டெல்லியின் ‘மனசாட்சி’யாக யார் இருக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ராஜ்யசபா இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சி அமைத்த கையோடு, தவெகவுக்கு ராஜ்யசபா எம்.பி ஆகும் மெகா வாய்ப்பு கிடைத்துள்ளது. ராஜ்யசபா எம்.பியாக யாரை டெல்லிக்கு அனுப்பப்போகிறார் விஜய் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
விழுப்புரம் சி.வி.சண்முகம் ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து அந்த இடம் காலியாகியுள்ளது. மயிலம் தொகுதியில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதால் சிவி சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அந்த பதவிக்காலம் 2028 வரை இருப்பதால், தற்போது அதற்கான இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
ராஜ்யசபா எம்.பி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (ஜூன் 1) தொட்ங்குகிறது. ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் ஜூன் 8 என்றும் வாபஸ் பெற ஜூன் 11 கடைசி நாள் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் தான் சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் இருந்து ஆளுங்கட்சியான தவெக மட்டுமே இந்த ராஜ்யசபா எம்.பியை சுலபமாகத் தேர்ந்தெடுக்க முடியும்.
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது ஒரே ஒரு இடத்திற்கான இடைத்தேர்தல். ஒரே ஒரு இடத்திற்குத் தேர்தல் நடக்கும்போது, சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கு அல்லது எந்தக் கூட்டணிக்கு அதிகபட்ச எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு (50% மேல்) இருக்கிறதோ, அவர்களது வேட்பாளர் தான் வெற்றி பெற முடியும்.
தற்போது தவெக-வுக்கு தனித்து 107 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். மேலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் சேர்த்தால் 119 வருகிறது. இதனால், எதிர்க்கட்சிகளான திமுக-வோ அல்லது அதிமுக-வோ தங்களது வேட்பாளர்களை நிறுத்தினாலும், தவெக வேட்பாளரை வீழ்த்துவது சாத்தியமில்லை. எனவே, ஜூன் 18-ல் நடக்கவிருக்கும் இந்த இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை வாக்குகள் பெற்றோ புதிய ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முதன்முறையாக நாடாளுமன்றத்தின் மேலவைக்குத் தங்கள் கட்சியின் பிரதிநிதியை அனுப்பும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், வேட்பாளர் தேர்வில் முதலமைச்சர் விஜய் மிகவும் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறார். டெல்லியில் தவெக-வின் குரலாக ஒலிக்கப் போவது யார் என்ற ரேஸில் 3 முக்கியப் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.
- ஜான் ஆரோக்கியசாமி
தவெக-வின் தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், கட்சியின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னணியில் இருந்தவருமான ஜான் ஆரோக்கியசாமியின் பெயர் முதலிடத்தில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தேசிய அளவில் அரசியல் தொடர்புகள் கொண்டவர் என்பதால் டெல்லியைக் கையாள இவர் பொருத்தமானவராக இருப்பார் எனக் கருதப்படுகிறது.
- ஜெகதீஷ்
விஜய்யின் மிக நெருங்கிய நட்பு வட்டாரத்திலும், அவரது நீண்டகால நிழலாகவும் இருக்கும் ஜெகதீஷின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. தனக்கு மிகவும் நெருக்கமான தீவிர விசுவாசி ஒருவரை டெல்லிக்கு அனுப்ப விஜய் நினைத்தால், ஜெகதீஷுக்கு ‘லக்’ அடிக்கலாம்.
- ரவி அரசியலில் ‘க்ளீன் இமேஜ்’ கொண்ட முன்னாள் சிவில் சர்வண்ட்களை முன்னிறுத்த விஜய் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சும் கோட்டை வட்டாரத்தில் நிலவுகிறது.
தவெக சார்பில் முதல் முறையாக எம்.பி ஆகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
