அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான “போர்வாள்” தமிழ் நாளிதழின் முன்னோட்டத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 20) தொடங்கி வைத்துள்ளார்.
அ.தி.மு.க.வில் நிலவி வரும் உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில், கட்சியின் புதிய அதிகாரப்பூர்வ நாளேடான “போர்வாள்” தமிழ் நாளிதழை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 20) அறிமுகம் செய்து வெளியிட்டார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது ‘செவ்வந்தி’ இல்லத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் இந்த நாளேட்டை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அ.தி.மு.க.வின் கொள்கைகள், தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்திகள் துல்லியமாகப் பொதுமக்களிடம் சென்றடையும் வகையில் இந்த நாளேடு செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த “நமது அம்மா” தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, த.வெ.க-வை ஆதரிக்கும் முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் வசம் சென்றுள்ளது.
இதன் காரணமாக, அந்த நாளேட்டின் தலைமை ஆசிரியராகவும், கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த கல்யாண சுந்தரம் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். மேலும், “நமது அம்மா” நாளிதழில் இடம்பெற்று வந்த எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.
இதனாலேயே, எடப்பாடி பழனிசாமி தரப்பின் தகவல் பரிமாற்றத்திற்காகத் தனித்துவமாக இந்த “போர்வாள்” நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது.
