‘‘பதவிக்காக கட்சிக்கு சிலர் துரோகம் செய்துவிட்டு போய்விட்டார்கள், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’’ என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் ஒரு பிரிவினர், அதாவது சிவி சண்முகம்- எஸ்பி வேலுமணி தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) புதிய அரசுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்த உட்கட்சித் துரோகத்தை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த மாவட்டச் செயலாளர்களின் பதவிகளைப் பறித்த அவர், உடனடியாக அந்த இடங்களுக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்தார்.
இந்த அதிரடி மாற்றங்களுக்குப் பிறகு, கட்சியின் கட்டுக்கோப்பையும், தனது தலைமையின் பலத்தையும் நிரூபிக்கும் வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் புதிய மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் அவர் பேசுகையில், “தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜமானது. ஆனால், ஒரு தோல்வியைக் கண்டதும் சுயநலத்திற்காகவும், பதவி ஆசைக்காகவும் சிலர் தாய் இயக்கத்திற்குத் துரோகம் செய்துவிட்டு, தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கச் சென்றுள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் துரோகங்களை முறியடித்து, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் அமைந்தது. தங்களுக்குக் கீழ் உள்ள மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு முழு ஆதரவு தெரிவித்துக் கையெழுத்திட்ட படிவங்களை அனைத்து மாவட்டச் செயலாளர்களும் அவரிடம் முறைப்படி சமர்ப்பித்தனர். இதன் மூலம், நிர்வாகிகள் மாறினாலும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் தன் பக்கமே இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் கட்சியை அடிமட்ட அளவில் மீண்டும் பலப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக விரைவில் தனித்தனியே ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இந்தச் சிறப்புப் பொதுக்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி நேரடியாகக் கலந்துகொண்டு, தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, புதிய நிர்வாகிகளுக்கு அடுத்தகட்டப் பணிகளுக்கான கட்டளைகளைப் பிறப்பிக்க உள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்வி மற்றும் தவெக அரசுக்குச் சில நிர்வாகிகள் ஆதரவளித்ததால் ஏற்பட்ட பின்னடைவிலிருந்து அதிமுகவை மீட்டெடுக்க, எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
