விஜயின் ‘ஜனநாயகன்‘ திரைப்படம் இணையதளத்தில் கசிந்தது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். அடுத்த வாரமே படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்தவதற்கான நடவடிக்கைகளும் நடந்து வருகிறது.
நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் திரைப்பட தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் தொடர்பான பிரச்னைகளால் படத்தின் வெளியீடு தாமதமானது.
இந்நிலையில், ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் முழுமையாக வெளியாகியுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஜனநாயகன் படத்தை அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் பட விவகாரத்தில் எந்த அளவு உதவ முடியுமோ அதனை செய்து கொடுப்போம் என்றும் சுப்பிரமணியன் கூறினார்.
