புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சாய்குமாரும், இதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலும் நியமிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்பட்டுள்ளார். திமுக எதிர்ப்பை அடுத்து அவரை மாற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்காக, மாநிலத்தில் இருக்கும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது உள்ளிட்ட உத்தரவுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை டிஜிபி ஆகியோரை மாற்றம் செய்து அண்மையில் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சாய்குமாரும், இதேபோல் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மற்றொரு அதிரடியாக தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளரை தொடர்ந்து உள்துறைச் செயலாளரும் மாற்றப்பட்டார். உள்துறை செயலாளராக இருந்த தீரஜ்குமார் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைச் செயலராக இருந்த மணிவாசனை புதிய உள்துறை செயலாளராக தேர்தல் ஆணையம் நியமித்தது.

இதற்கிடையே தான் சந்தீப் மிட்டலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமித்ததற்கு எதிராக திமுக சார்பில் டி.ஆர்.பாலு தேர்தல் ஆணையத்திடம் புகார் கடிதம் கொடுத்திருந்தார். அதில், “சந்தீப் மிட்டல் பா.ஜ.க மற்றும் RSS அமைப்புகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. சந்தீப் மிட்டல் தனது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில், அவரே ஒப்புக்கொண்ட ஒரு உண்மை இது.

இஸ்லாம் மற்றும் “இடதுசாரி சித்தாந்தம்” குறித்து சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள், அந்த அதிகாரி ஒருதலைப்பட்சமாகச் செயல்படுபவரே தவிர நடுநிலையாளர் அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறது. ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு’ ஆதரவாகவே அவர் செயல்படுவார். இதுதவிர சந்தீப் மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனை அடுத்து தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்பட்டுள்ளார். டி.ஆர்.பாலு கடிதத்தை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தீப் மிட்டலை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை என டி.ஆர்.பாலு கூறியிருந்த நிலையில் தற்போது அவரை விடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal