துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ளது. துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளர் சேகர்பாபு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் அவர்களை 27,274 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
துறைமுகம் சட்டமன்றத் தொகுதி சென்னை சென்ட்ரல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திராவிட முன்னேற்ற கழகம் தனது வெற்றியைப் பதிவு செய்தது.
2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீண்டும் களமிறங்குகிறார். அ.தி.மு.க. சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ரூஃப்கான் ஷெரிஃப் களம் காண்கிறார். 2026ல் புதிதாக போட்டியிடும் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ சார்பில் பி.எஸ். சினோரா அசோக் போட்டியிடுகிறார்.
மூன்றாவது முறையாக சென்னை துறைமுகம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் அமைச்சர் சேகர் பாபு. துறைமுகம் தொகுதியில் என்னென்ன சவால்கள் உள்ளது? மீண்டும் வெற்றிப்பெற்றால் என்னென்ன செய்வீர்கள்? என்பதற்கு வேட்புமணுதாக்கலின் போது பதிலளித்தார் அமைச்சர் சேகர் பாபு!
இது தொடர்பாக பேசிய சேகர் பாபு, ‘‘என் உயிரினும் மேலான தளபதி மற்றும் துணை முதல்வர் நல்லாசியோடு இன்றைக்கு 3வது முறையாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக துறைமுகம் தொகுதியில் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் சரி, ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தபோதும் மக்களுக்கு தேவையான அடிப்படை மேம்பாட்டு வசதிகளை நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன்.

துறைமுகம் தொகுதி மக்களிடம் அமைதியான சூழல் நிலவிவருகிறது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் மூலம் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வியாபார மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தி.மு.க. ஆட்சியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் என்னால் முடிந்த அளவில் தனிப்பட்ட முறையிலும், கழக்கத்தின் சார்பிலும், ஆட்சி நிர்வாகத்தின் வாயிலாகவும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன். எனவே, மூன்றாவது முறையாக என்னை மக்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் நடந்துகொண்டிருக்கும் பணிகள் தொடரவும், தெடங்கப்பட வேண்டியிருக்கும் மேம்பாட்டுப் பணிகளை தொடங்கிடவும் எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்றனார்.
துறைமுகம் தொகுதியைப் பொறுத்தளவில் சேகர் பாபுவுக்கு தனிப்பட்ட முறையில் அதிக செல்வாக்கு இருப்பதை நம்மால் தொகுதியில் வலம்வரும் போது உணர முடிந்தது. இங்கு இரண்டாம் இடத்திற்குதான் அ.தி.மு.க., த.வெ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
எனவே, மீண்டும் 3வது முறையாக சேகர் பாபு வெற்றி பெற்று, தி.மு.க. இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கும் பட்சத்தில் அமைச்சராகும் வாய்ப்பு இருக்கிறது என்பதுதான் துறைமுகம் தொகுதி நிலவரமாக இருக்கிறது.
