திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் நடந்து முடிந்த இரண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இலை துளிர்க்கும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

துறையூர் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் சரோஜா இளங்கோவன். கடந்த சனிக்கிழமைதான் தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி மணிமாறனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்வு பெரிய கடை வீதி, பாலக்கரை, திருச்சி சாலை வழியாக நடைபெற்றது.

அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா இளங்கோவனைப் பொறுத்தளவில் 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலின் போதே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் நடந்த வேட்பாளர் நேர்காணலில் கலந்துகொண்டவர். துறையூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என நான்குமுறை முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் மனம்தளராமல் கட்சிப்பணியாற்றி வந்தார் சரோஜா. 2026ல் ஐந்தாவது முறை சரோஜா இளங்கோவனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது அவரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த பலன் என்றே சொல்லலாம்!

சரோஜா இளங்கோவனைப் பொறுத்தளவில் யாரிடமும் அதிர்ந்துகூட பேசமாட்டார். அந்தளவிற்கு கட்சி நிர்வாகிகளிடம் பொறுமையாகவும், அனுசரித்தும் செல்லக்கூடியவர் என்பதால், தி.மு.க.வின் ஹாட்ரிக் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்கிறார்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தளவில் துறையூர் தனி சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக லெனின் பிரசாத் கடந்த 3ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளார். துறையூர் அருகே உள்ள பாலகிருஷ்ணம்பட்டி பகுதியை பூர்விகமாக கொண்ட இவர், தற்போது திருச்சியில் வசித்து வருகிறார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகவும் இவர் பதவி வகிக்கிறார். இவரது தாயார் திருச்சி மாநகராட்சியில் கவுன்சிலராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

லெனின் பிரசாத்

துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டபோதே அதிருப்தி ஏற்பட்டது. இதனால், தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்கி, போராட்டத்திலும் ஈடுபட்டனர். சரி காங்கிரசுக்கு ஒதுக்கியபோதும், வேட்பாளர் துறையூர் பகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவரா? என்றாலும் கிடையாது.

தேசிய அளவில் ராகுல்காந்திக்கு நெருக்கமாக இருப்பதால், துறையூர் தொகுதிக்கு லெனின் பிரசாத் ‘திடீர்’ வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறதார். துறையூர் தொகுதியைப் பொறுத்தளவில் த.வெ.க., நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டாலும், அ.தி.மு.க., காங்கிரசுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது.

துறையூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் வேட்பாளர் களமிறங்கியிருந்தால் கடும் போட்டியிருக்கும். காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.வுக்கு தொகுதி சாதகமாக மாறியிருக்கிறது. இருந்தாலும் வேட்பாளரைப் பார்த்துதான் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதால், சரோஜா இளங்கோவன் அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார். அவரது கணவர் இளங்கோவனும் துறையூர் பகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்திருப்பதால், தி.மு.க.வின் ஹாட்ரிக் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதுதான் கள நிலவரமாக இருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal