மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரையை மணிப்பூராக மாற்ற என்.டி.ஏ. துடிக்கிறது” என விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல் தான் திராவிட மாடல். ஆனால், மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் என்.டி.ஏ. வன்முறை மாடல்” என விமர்சித்துள்ளார்.

மதுரை, திருமங்கலம், ராயபாளையம் பகுதியில் நடைபெற்ற திமுக கூட்டணி பிரச்சாரக் கூட்டத்தில், மதுரை கிழக்கு ­- மூர்த்தி, மதுரை மத்தி – பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு – தளபதி, மதுரை தெற்கு – பூமிநாதன், மதுரை மேற்கு – ரகுபாலாஜி, திருமங்கலம் – மணிமாறன், திருப்பரங்குன்றம் – கிருத்திகா, சோழவந்தான் – வெங்கடேசன் மற்றும் உசிலம்பட்டி – சரவணக்குமார் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மதுரைக்கு திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களையும், செய்த சாதனைகளையும் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரையை தென்தமிழ்நாட்டின் வளர்ச்சி மையமாக மாற்ற ஸ்டாலின் முடிவு செய்துவிட்டார். அதற்கான திட்டங்களை கொண்டுவந்துள்ளார் என ஆங்கில நாளேடுகள் செய்திகள் வெளியிட்டன” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல் தான் திராவிட மாடல். ஆனால், என்.டி.ஏ. முன்வைப்பது வளர்ச்சியை கெடுக்கும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும், மக்களை பிளவுப்படுத்தும் ஆரிய மாடல். இன்னும் சொல்ல வேண்டுமானால், மதுரையை மணிப்பூராக மாற்ற துடிக்கும் வன்முறை மாடல். அவர்களின் அடிமைகளாக அதிமுகவை கெடுத்து குட்டி சுவராக்கிவைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

2015 பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் அறிவித்தார்கள், 2019ல் அடிக்கல் நாட்டினார்கள், 2021 சட்டமன்றத் தேர்தலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலும் முடிந்து 2026 சட்டமன்றத் தேர்தலும் வந்துவிட்டது. ஆனால், மதுரை எய்ம்ஸ் மட்டும் வரவேயில்லை” எனத் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு திறந்துவைத்த மருத்துவமனை, நூலகம் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டார்.

மேலும் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இந்தியாவிலேயே அதிக திட்டங்களை தமிழ்நாடு தான் செயல்படுத்திவருகிறது. ஆனால், இது எதுவும் தெரியாததுபோல் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழ்நாட்டில் எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அரசு பணம் எங்கே செல்கிறது? கடன் சுமை அதிகரித்துவிட்டது, தமிழ்நாடே திவாலாகப்போகிறது என எந்தவித புரிதலும் இல்லாமல் பேசியுள்ளார்.

எங்கள் திட்டங்களின் பெயர்களை மாற்றி அறிக்கை வெளியிட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பியூஷ் கோயல் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்” இவ்வாறு பேசியுள்ளார்.

மு.க.ஸ்டாலினின் மதுரை விசிட்டிற்கு பிறகு மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் சில அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களின் வெற்றி வாய்ப்பே கேள்விக்குறியாக இருக்கிறது. மணிப்பூரையும், மதுரையையும் இணைத்து முதல்வர் பேசியிருப்பதுதான் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal