சென்னை மாநகரின் முக்கியமான மற்றும் அரசியல் கவனம் ஈர்க்கும் தொகுதிகளில் ஒன்றான அண்ணா நகர் சட்டசபை தொகுதி, இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக கருதப்படும் சிற்றரசு, திமுக சார்பில் களமிறங்கியுள்ளதால் இந்த தொகுதி அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா களமிறங்குகிறார். த.வெ.க. சார்பில் ராம்குமார், நாம்தமிழர் கட்சி சார்பில் சங்கர் ஆகியோர் போட்டியிடுவதால் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது.

அண்ணா நகர் சட்டசபை தொகுதி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆன தொகுதி. அவருக்குப் பின், பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் அங்கு வெற்றி பெற்றுள்ளனர். 2011ல் கோகுல இந்திரா அண்ணா நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். கடந்த 2 சட்டசபை தேர்தல்களிலும் திமுக சார்பில் எம்.கே. மோகன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆக உள்ளார்.
இந்த முறை, அண்ணா நகர் எம்.எல்.ஏ மோகனின் மகன் கார்த்திக் மோகன் சீட் கேட்டு, தொகுதிக்குள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வந்தார். கார்த்திக் மோகன், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு நெருக்கமானவர். எனினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் வலதுகரமாகத் திகழும் சிற்றரசுவுக்கு அண்ணா நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே சிற்றரசு போட்டியிடப்போவதாக கூறப்பட்ட நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவாக தீவிர களப்பணியில் ஈடுபட்டார். இப்போதும், உதயநிதி ஸ்டாலினின் நிழல் போல சேப்பாக்கம் தொகுதியை வலம் வந்து கொண்டிருக்கிறார் சிற்றரசு.
திமுக சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், உதயநிதியின் முன்னணி தளபதிகளுள் ஒருவருமான சிற்றரசு தனது தேர்தல் பரப்புரையை கடந்த 4ம் தேதி பரப்புரையைத் தொடங்கினார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய நே.சிற்றரசு, ‘‘கடந்த முறையை விட இந்த முறை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. காரணம், கடந்த 5 ஆண்டு காலம் தலைநகர் சென்னைக்கு தமிழக முதல்வர் கொண்டு வந்த வளர்ச்சி திட்டப் பணிகள்தான். சென்னை மாநகரினுடைய கட்டமைப்பை மேன்மேலும் வலுப்படுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கடந்த 5 ஆண்டுகளில் பெரிதாக வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை. காரணம், உள்கட்டமைப்பு பணிகள்தான்.
இன்றைக்கு நான் களத்தில் இறங்கி வாக்கு கேட்கும்போது, மக்கள் எனக்கு பேராதரவு கொடுத்து வருகிறார்கள். காரணம், கடந்த 5 ஆண்டுகாலம் திராவிட மாடல் ஆட்சியில் செய்துகொடுக்கப்பட்ட நலத்திட்டங்கள்தான். எனவே, அண்ணாநகர் தொகுதியில் மூன்றாவது முறையாக தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி’’ என்றார்.
அ.தி.மு.க. சார்பில் கோகுல இந்திரா வேட்பாளராக களமிறங்குகிறார். இவர் வெளியூரைச் சேர்ந்தவர் என்பதால், உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகள் இவருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்காததால்தான், கடந்த இரண்டு முறையும் தோல்வியைத் தழுவினார். 2011ல் கோகுல இந்திரா வெற்றி பெற்றதற்கு காரணம், அப்போது தி.மு.க. ஆட்சியின் மீதான அதிருப்தி காரணமாக அடித்த அலையில் கோகுல இந்திரா வெற்றி பெற்றார்.
இந்த முறை மண்ணின் மைந்ததான சிற்றரசு களமிறங்குவதால், தி.மு.க.வுக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். காரணம், தொகுதிக்குள் அனைத்து மக்களுக்கும் நல்ல பரீச்சயமானவர் சிற்றரசு. இவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால், உடனடியாக தங்களது நிறை, குறைகளை சொல்லி நிவர்த்தி செய்துகொள்ளலாம் என்பதுதான் தொகுதி மக்களின் எண்ணவோட்டமாக இருக்கிறது.
தவிர, த.வெ.க. வேட்பாளர் இந்தத் தொகுதியில் சுமார் 5 முதல் 9 சதவீத வாக்குகள் வரை பிரிக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்து நாம் தமிழர் வேட்பாளருக்கும் களத்தில் இறங்கியிருக்கிறார். ஆக மொத்தத்தில் நான்குமுனைப் போட்டியில் அண்ணாநகர் தொகுதியில் தி.மு.க. ‘ஹாட்ரி’ வெற்றி பெறும் என்பதுதான் தற்போதைய கள நிலவரமாக இருக்கிறது.
