சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. அமைச்சர்களை அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் குறி வைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை குறி வைத்திருப்பதுதான் எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இருபது நாள்கூட இல்லை. வரும் 23ம் தேதி மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து வேட்பாளர்களும் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
அதன்படி அதிமுக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரன் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். திறந்தவெளி ஜீப்பில் சென்று அவர் நேரடியாகப் பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே அவருடன் தொடர்புடைய இடங்களில் விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் இணைந்து இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். தேர்தல் முடிந்த பிறகே இது தொடர்பான முழு விவரம் தெரிய வரும். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை அது இந்த முறை மாநிலம் முழுக்க கவனம் பெறும் ஒரு தொகுதியாக மாறியுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் போட்டியிடுகிறார்.. அதேபோல தவெக சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி என்பவர் போட்டியிடுகிறார்.
கடந்த 2011 தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அங்கு அதிமுக வென்றிருந்தது. அதேநேரம் 2021ல் இந்த தொகுதி திமுக வசமானது. இனிகோ இருதயராஜ் 94 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். அதிமுக வேட்பாளர் வெள்ளமண்டி நடராஜன் 40 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றார்.
ஏற்கனவே, லால்குடி த.வெ.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு நெருங்கிய உறவினர் வீட்டில் ரூ.50 லட்சம் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத் தக்கது.
