தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், மாணிக்கம் தாகூர் எம்.பி. தனது பொறுப்பிலிருந்து விலகியிருப்பது, காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற நிலையில், மார்ச் 30-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனிடையே அரசியல் கட்சியினர் அனைவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனார். ஏன், சசிகலா, டாக்டர் ராமதாஸ், டாக்டர் கிருஷ்ணசாமி கூட வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். ஆனால், தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி இன்னும் தமிழகத்திற்கான வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
தினமும் தமிழக காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரசார் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகியுள்ளார்.
தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். முக்கியமான தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் திடீரென விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
