கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின்பேரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதில் விசாரணைக்காக டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜனவரி 6-ம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்படி ஆஜரான விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். கூட்டத்துக்கு தாமதமாக வந்தது ஏன்? பாதுகாப்பு ஏற்பாடுகளில் என்ன குளறுபடிகள் நடந்தது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் மீண்டும் நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த இருமுறை சம்மன் அனுப்பட்ட நிலையில், தற்போது 3-வது முறையாக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், விஜய் நாளை விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
சிபிஐ சம்மன் தொடர்பாக வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். ”சிபிஐயிடம் நேரில் ஆஜராவதற்கு அவகாசம் கேட்கலாமா?” எனவும் விஜய் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
