ஜனவரி 9ம்தேதி ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் உள்பட எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக (அரசியல் ரீதியாக) தள்ளிப்போதனை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் பொங்கலன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. இருப்பினும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. வழக்கு காரணமாகவே சென்சார் பிரச்சினை முடிவில்லாமல் போவதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர்.

வழக்கு இல்லாமல் இருந்தாலாவது மறு தணிக்கையை நோக்கிச் செல்லலாம்.. வழக்கு இருப்பதாலேயே மறு தணிக்கையிலும் சிக்கல் இருப்பதாக பல்வேறு வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ஜனநாயகன் படக்குழு நீதிமன்றங்களில் இருந்து வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. மறு ஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாலேயே வழக்கை வாபஸ் பெறுவதாக ஜனநாயகன் படத்தைத் தயாரித்த கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் கூறியது. கடந்த மாதமே வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதனால் அப்போதே படம் சென்சார் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ரிவைசிங் கமிட்டி அமைக்கப்படவே சில வாரங்கள் பிடித்தது. இதனால் மறு தணிக்கைக்கான வேலைகள் நடக்கவில்லை.

இதனால் விஜய் ரசிகர்கள் குழப்பத்திலேயே இருந்தனர். இந்தச் சூழலில் தான் ரிவைசிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜனநாயகன் படம் இன்று மார்ச் 9ம் தேதி சென்சார் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (சி.பி.எஃப்.சி.) மறு ஆய்வுக் குழு இந்த படத்தை இன்று பார்க்கவுள்ளனர். இன்று பிற்பகல் ரிவைசிங் கமிட்டி முன்பு படம் சென்சார் செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

மேலும், திட்டமிட்டபடி அனைத்தும் ஜனநாயகனுக்கு சாதகமாக நடந்தால் படம் இந்த வாரமே அல்லது இந்த மாதமே கூட ரிலீஸ் ஆகலாம். அதாவது இன்றைய தினம் படத்தைப் பார்க்கும் ரிவைசிங் குழு, எந்தவொரு ஆட்சேபனையும் எழுப்பாமல் சென்சார் சான்றிதழ் கொடுத்தாலே போதும். படத்திற்கு இருக்கும் மேஜர் பிரச்சினையே அதுதான். சென்சார் சான்றிதழ் கிடைத்தால் இந்த வாரமே கூட படம் ரிலீஸ் ஆகலாம்.

இந்த காலத்தில் சினிமா புரோஜக்சன் எல்லாம் டிஜிட்டல் முறையிலேயே நடப்பதால்.. வெளிநாடுகளுக்குக் காப்பி அனுப்புவது தொடங்கி அனைத்து வேலைகளும் ஓரிரு நாட்களில் முடித்துவிட முடியும். எனவே, புதன்கிழமைக்குள் சென்சார் பஞ்சாயத்து முடிந்து, படம் தணிக்கை செய்யப்பட்டால் இந்த வாரமே படம் ரிலீஸாக வாய்ப்பு மிக மிக அதிகம். மார்கெட்டிங் காரணங்களுக்காக இந்த வாரம் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும் கூட அடுத்த வாரம் படம் ரிலீசாக வாய்ப்பு அதிகம். ஏனென்றால் கேஜிஎஃப் புகழ் யாஷ் நடித்திருந்த டாக்சிக் படம் அடுத்த வாரமே முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், மத்திய கிழக்கு சூழல் உள்ளிட்ட காரணங்களால் பட ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டாக்சிக் படம் வருவதால் அடுத்த வாரம் வேறு படங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்போது டாக்சிக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால்.. அடுத்த வாரம் ஜனநாயகனுக்கு பக்காவான ரிலீஸ் தேதி அமையும்.

மேலும், அடுத்த வாரம் ஜனநாயகனுக்கு கடைசி வாய்ப்பாகக் கூட இருக்கும். ஏனென்றால் விஜய் இப்போது அரசியலில் இருக்கிறார். இதனால் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. என்னதான் சென்சாரே ஆகியிருந்தாலும் கூட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தால் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். இதனால் இன்று நடக்கும் மறு தணிக்கை ரொம்பவே முக்கியமானதாக மாறியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal