மறைந்த முதல்வர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆவதற்கு கொங்குமண்லடம்தான் கைகொடுத்தது. எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆவதற்கும் கொங்கு மண்டலம்தான் கைகொடுத்தது. அப்படிப்பட்ட கொங்கு மண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற செந்தில் பாலாஜி வியூகம் வகுத்து வருகிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கொங்கு மண்டல அரசியல் களம் அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த கால வெற்றிகள் மூலம் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. அந்தப் பகுதியில் தங்களின் வெற்றியை தக்க வைப்பதற்கு அதிமுக தீவிர முயற்சி செய்து வருகிறது. அதேநேரத்தில் கொங்கு மண்டலத்தின் ஆழமாக கால் பதிப்பதற்கு திமுகவும் காய் நகர்த்தி கொண்டிருக்கிறது.
கடந்த 5 வருடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகமுறை விசிட் செய்தது கோவையில் தான். கோவை, கரூர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக வெற்றியை உறுதி செய்ய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகம் கடந்த 24ம் தேதி திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, ‘‘ஒவ்வொரு தொகுதியிலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் எவ்வளவு, பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது எவ்வளவு வாக்குகள் பெற்றனர், தனித்து போட்டியிட்டு அதிமுக, பாஜக எவ்வளவு வாக்குகள் பெற்றன என்ற தகவலை ஆராயுங்கள். அதை அறிந்து, நமக்கு எவ்வளவு வாக்குகள் தேவை என திட்டமிட்டு களப்பணியாற்றுங்கள். நம் வெற்றியை உறுதி செய்கிற வகையில் பணி இருக்க வேண்டும்.
நம் அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும். கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, இது திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி.. சேலத்தில் இருந்து வந்தாலும் சரி. எங்கிருந்து வந்தாலும் இங்கு பருப்பு வேகாது.
சட்டமன்ற தேர்தலில் முதல் அடி திமுகவுடையதாக இருக்க வேண்டும். திமுகவினர் தடுப்பு ஆட்டம் ஆடாமல் அடித்து ஆட வேண்டும். எப்போதும் முதல் அடி நம்முடையதாக இருக்க வேண்டும். நம் அரசின் சாதனை திட்டங்களை வீடு தோறும் கொண்டு சென்று, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். நம்ம தான் ஜெயிப்போம். நம்ம மட்டும் தான் ஜெயிப்போம்’’ என்றார்.
கடந்த மூன்று முறையாக அ.தி.மு.க.விற்கு கைகொடுத்த கொங்குமண்டலத்தை தி.மு.க.வின் கோட்டையாக செந்தில் பாலாஜி மாற்றுவாரா? அப்படி மாற்ற எடப்பாடி பழனிசாமியும், ‘மேலிடமும்’ விடுமா இல்லை, செந்தில் பாலாஜிக்கு ‘செக்’ வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
