திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க.வின் ‘ஹாட்ரிக்’ வெற்றியை அ.தி.மு.க. தடுக்குமா என்ற எதிர்பார்ப்பு துறையூர் தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
துறையூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தளவில் திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் குமார் இரண்டாவது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இந்தமுறையும் இவர்தான் களமிறங்குவதாக தெரிகிறது. ஒருவேளை இவருக்கு வாய்ப்பு வழங்காவிட்டால் திமுக விளையாட்டு அணியைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.
துறையூர் தொகுதி எம்.எல்.ஏ., ஸ்டாலின் குமாரைப் பொறுத்தளவில் மிகவும் எளிமையாக இருக்கக்கூடியவர், எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடியவர். கட்சி பாகுபாடின்றி அனைவர் வீட்டு நல்லது, கெட்டதுகளிலும் கலந்துகொள்ளக்கூடியவர். இவர்மீது எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. இப்படி இவர் மீது ஏராளமான பாஸிடிவ்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

தவிர, துறையூர் சட்டமன்றத் தொகுதியில் ஒன்றியச் செயலாளர்கள் ‘வாரிக் குவித்ததைக்’ கூட எம்.எல்.ஏ.வாக இருந்தும் சம்பாதிக்கவில்லை. உதராணம், டாஸ்மாக் பார்கள் முதற்கொண்டு ‘சந்துக்கடை’ வரை ஒன்றியச் செயலாளர்கள்தான் கல்லா கட்டி வருகிறார்கள். காரணம், அமைச்சர் கே.என்.நேருவின் ஆளுமை திருச்சி மாவட்டத்தில் அதிகமாக இருப்பதால், அமைச்சர் கைகாட்டுபவர்கள்தான் ‘கல்லா’ கட்ட முடியும். அந்தவகையில் இவர் ஒதுங்கியிருக்கிறார். மேலும், இவரால் தனித்துவமாக செயல்படமுடியவில்லை என்ற குற்றச்சாட்டை மட்டும்தான் வைக்க முடியும். எனவே, இந்த முறை தனக்கு சீட் கிடைக்கும் என நம்பியிருக்கிறார். கிடைத்தால் மூன்றாவது முறையாக துறையூர் தொகுதியின் எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என கணக்குப் போட்டு வேலை பார்த்து வருகிறார்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் அறிவழகன் விஜய், பச்சப்பெருமாள்பட்டி மனோகரன், மைவிழி அன்பரசு ஆகியோர் ரேஸில் இருந்தாலும், அறிவழகன் விஜய்க்குதான் அதிக வாய்ப்பு என்கிறார்கள். காரணம், துறையூருக்கு எடப்பாடியார் வந்தபோது ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்தார். தவிர, அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது கட்சி நிர்வாகிகளுக்கு வேஷ்டி, சேலை உள்ளிட்ட தொகுப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
துறையூர் தொகுதி முன்பு உப்பிலியபுரம் சட்மன்றத் தொகுதியாக இருந்தது. அப்போது மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி, ‘உப்பிலியபுரம் உப்பில்லாத ஊர்’ என்று விமர்சித்தார். காரணம். இந்த தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது. தற்போது, அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தி.மு.க.விடம் ‘கைநீட்டி’ விடுவதால், தேர்தல் சமயத்தில் வேலைபார்க்கும்போது ‘கைகட்டிக்’ கொண்டிருக்கிறார்கள். இதனால் தி.மு.க. வேட்பாளர் எளிதில் வெற்றி பெற்று விடுகிறார்.
இந்தமுறை துறையூர் தொதியில் அறிவழகன் விஜய்யை தவிர்த்து வேறு யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், தி.மு.க. ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுவது உறுதி என்கிறார்கள். காரணம், வேறு யாரை நிறுத்தினாலும் ‘உள்குத்து’ அரசியல் அதிகமாக இருக்கும். வழக்கம் போல தி.மு.க.விடம் ‘கைநீட்டி’ விடுவார்கள். ஏற்கனவே, இரண்டுமுறை அ.தி.மு.க. வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமும், உள்குத்து, ‘கை’நீட்டியதுதான் என்கிறார்கள்.
துறையூர் தொகுதியில் தி.மு.க.வின் ‘ஹாட்ரிக்’ வெற்றியை அ.தி.மு.க. தடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
