அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்துவது தொடர்பாக வி. புகழேந்தி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி, பெயரை பயன்படுத்துவது தொடர்பாக வி. புகழேந்தி அளித்த புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் உத்தரவிட்டது.

அதன் பிறகு புகார் மனு மீது நடவடிக்கை இல்லை என்று குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்துக்கு எதிராக புகழேந்தி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா விசாரித்தார். புகார் மீது இரண்டு ஆண்டுகள் கடந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை இல்லை. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. என அவரது வழக்கறிஞர் திருமூர்த்தி வாதிட்டார்.
அப்போது தேர்தல் ஆணையத்திடம், புகார் மனு மீது செப்டம்பர் 14ம் தேதிக்கு பிறகு அழைத்து விசாரணை நடத்தினார்களா ? இன்னும் எவ்வளவு காலம் ஆகும் ? எப்போது விசாரித்து தீர்வு காணப்படும் ? உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் ? என நீதிபதி கேள்விகளை எழுப்பினார்.
எஸ்ஐஆர் நடவடிக்கைகள் இருப்பதால், சரியான காலத்தை தெரிவிக்க முடியாது, இருப்பினும், இந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு தெரிவிக்க அவகாசம் தேவை என தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையேற்ற நீதிபதி , இரட்டை இலை சின்ன விவகாரத்தில் புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
