தி.மு.க. தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற புகாருடன், காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை டெல்லி சென்றிருப்பதாக தகவல்கள் கசிகிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், இந்தமுறை “ஆட்சியில் பங்கு வேண்டும்” எனத் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். இது திமுகவை அதிருப்தி அடைய செய்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது எனத் தெரிவித்து இருந்தார்.
சென்னையில் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கை தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது காங்கிரஸிற்கும் நன்றாகத் தெரியும் என்று முதலமைச்சர் கூறினார். காங்கிரஸ் உடனான கூட்டணி வலுவாக இருப்பதாகவும், அதில் பிளவை ஏற்படுத்த, சிலர் இது போன்ற கருத்துகள் மூலம் சதி திட்டம் தீட்டுவதாகவும் அவர் விமர்சித்தார்.

முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்த பின்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் விடாப்பிடியாக உள்ளார். மதுரையில் நேற்று நடந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், மதுரை வடக்குதான் நமது லட்சியம். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் எந்தத் தொகுதியை வாங்குகிறீர்களோ இல்லையோ, கண்டிப்பாக மதுரை வடக்குத் தொகுதி காங்கிரஸுக்கு வாங்கியேயாக வேண்டும் எனச் சொல்லியுள்ளேன்.
இந்நிலையில் பிரபல செய்தி சேனலுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ‘‘காங்கிரஸ் கட்சியில் ஒரு வருத்தம் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டது. 41 தொகுதிகளில் போட்டியிட்ட வந்த நாங்கள் தற்போது முதன்முறையாக 25 தொகுதிக்குள் வந்தோம்.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ஸ்டாலினை முதல்வராக்க பாடுபட்டோம். மீண்டும் அவர் வெற்றி பெற்று முதல்வராக வேண்டுமென்றுதான் நினைக்கிறோம். கூட்டணி கட்சியில் இருந்து 2 பேர் அமைச்சர்களாக இருந்தால் என்ன தவறு. நேர்மையானவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில் என்ன பிரச்னை என்றும் தெரிவித்துள்ளார்.
நம்மிடம் ஆள் இல்லை எனச் சொல்பவர்களின் வாயை மூடவைக்க வேண்டும் என்றால் நமது பலத்தைக் காட்ட வேண்டும். இது நமது தன்மானத்தை காக்க வேண்டிய நேரம். அவர்களுக்கு பயம் வரவேண்டும் என்றார். மேலும் எங்களைப் பொறுத்தவரை நாங்கள் மரியாதையை மட்டும்தான் கேட்கிறோம். ஆட்சியில் பங்கு இல்லை என முதலமைச்சர் சொல்லியிருப்பது அவரின் கருத்து என்றும் தெரிவித்து இருந்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவசர பயணமாக டெல்லி செல்கிறார். கூட்டணி குறித்து பேச குழு அமைத்த பின்னர், இணக்கத்தை சிதைக்கும் வகையில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பேசி வரும் நிலையில் மாணிக்கம் தாகூருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கடிதத்துடன் செல்வப்பெருந்தகை டெல்லி செல்கிறார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்!
