அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தனியரசு இன்று சந்தித்து பேசியதுதான் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாகப் பேசி இருந்தார் தனியரசு. இந்நிலையில் திடீர் ட்விஸ்ட்டாக தனியரசு, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
வரும் ஜனவரி 23 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் தான் தனியரசு, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சென்னை அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட தனியரசு விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியானது. தனியரசு அப்போது கொடுத்த பேட்டியும் திமுகவுக்கு ஆதரவானதாகவே இருந்தது.
திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சியின் சிறப்பை உணர்ந்து முதல்வரை நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்தேன். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக ஜனநாயகத்தை பாதுகாக்கும் முதன்மை அரசியல் இயக்கமாக திமுக இருக்கிறது. திமுக கூட்டணியில் இல்லாவிட்டாலும் இந்த ஆட்சியின் திட்டங்களை ஆதரித்து வருகிறோம். தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தல் உட்பட எதிர்காலத்தில் திமுகவோடு இணைந்து செயல்படுவது குறித்தும் பேசினோம் எனக் கூறி இருந்தார் தனியரசு.
மேலும், அதிமுக கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்தோம். ஆனால், இன்று பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது என்பது வேதனையாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் அதிமுக வலிமையை இழந்துள்ளது. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளைகூட பழனிசாமியால் பாதுகாக்க முடியவில்லை என்றும் தெரிவித்து இருந்தார் தனியரசு.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தனியரசு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016 சட்டசபை தேர்தலில்தனியரசு தலைமையிலான தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, அதிமுகவுடன் கூட்டணி வைத்து காங்கேயம் தொகுதியில் போட்டியிட்டது. இதில் மீண்டும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார் தனியரசு.
இந்த நிலையில்தான், அ.தி.மு.க. கூட்டணியில் தனியரசு இணைவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
