2026 சட்டமன்றத் தேர்லை குறிவைத்து ‘மாஸ்’ நடிகரான விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து, ‘அரசியல் எதிரி தி.மு.க.; கொள்கை எதிரி பா.ஜ.க.’ என அரசியல் களமாடினார்.
இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுக்கே இதுநாள் வரை இல்லாத அளவிற்கு விஜய்க்கு தொண்டர்களின் செல்வாக்கு அதிகரித்தது. விஜய் பிரச்சாரத்திற்கு சென்றால் பார்ப்பதற்கு லட்சக்காணக்கான இளைஞர்கள் திரண்டு வருகின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. உள்பட சிறிய அரசியல்கட்சிகளே பணம் கொடுத்துதான் கூட்டத்தை கூட்டுகின்றனர். ஆனால், விஜய்க்கு தாறுமாறாக கூட்டம் சேர்கிறது. இதில் இளைஞர்களும், இளம்பெண்களும் அதிகம். இந்த இளைஞர்கள் தி.மு.க.வை வளைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில்தான் தற்போது, த.வெ.க.வைச் சேர்ந்த இளைஞர்களின் கோபம் அப்படியே என்.டி.ஏ. கூட்டணி மீது (பா.ஜ.க.) மாறியிருக்கிறது.

நடிகர் விஜய் தொண்டர்களின் திடீர் மனமாற்றம் குறித்து தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம்.
‘‘சார், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தி.மு.க.வின் வாக்குகளை த்தான் பிரிக்கும். இதனால் என்.டி.ஏ. (பா.ஜ.க.) கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க. எளிதாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துவிடும் என கணக்குப் போட்டார்கள். தவிர சிறுபான்மை வாக்குகள் தி.மு.க.வுக்கு அப்படியே போகாமல் விஜய் பக்கம் திரும்பும் என்றும் கணக்குப்போட்டனர். இதனால் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என ‘என்.டி.ஏ-’ கூட்டணியினர் கணக்குப் போட்டார்கள்.
ஆனால், ‘ஜனநாயகன்’ பட விவகாரத்தில் விஜய் தொண்டர்களை கொதிக்க வைத்துவிட்டது. அதாவது தனி நீதிபதி ‘ஜனநாயகன்’ படத்தை உடனடியாக வெளியிடும் வகையில் தீர்ப்பளித்தார். தவிர, சென்சாரின் மறு ஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்திருந்தார். இதோடு விட்டிருந்தால் பி.ஜே.பி.யின் மீது விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கோபம் திரும்பியிருக்காது.
‘ஜனநாயகன்’ படத்திற்கு தனி நீதிபதி தீர்ப்பளித்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் தலைமை நீதிபதி அமர்வுக்கு சென்சார்போடு வழக்கறிஞர்கள் மேல்முறையீடு செய்ததுதான் விஜய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த மேல் முறையீட்டு வழக்கில் மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி ‘ஜனநாயகன்’ படத்திற்கு தடை பெற்றார்.
அதாவது, விஜய்யின் ஒரு திரைப்படத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்காமல் இந்தியாவின் நம்பர் ஒன் வழக்கறிஞர் ஆஜராகமாட்டார். அமலாக்கத்துறைக்கு ஆஜராகும் துஷார் மேத்தா சாதாரன விஜய்யின் படத்தை வெளியிடுதவற்கு தடைவிதிக்க வாதாடியிருக்கிறார். இந்த விவகாரம்தான் விஜய் ரசிகர்களை பா.ஜ.க.விற்கு எதிராக திரும்பச் செய்துவிட்டது. இதனால்தான் விஜய் ரசிகர்கள் என்.டிஏ. கூட்டணிக்கு எதிராக கருத்துக்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், தி.மு.க. ‘குஷி’யில் இருக்கிறது’’ என்றனர்.
‘விஜய் மீது ‘மேலிடம்’ இந்தளவிற்கு கோபப்படுவதற்கு என்ன காரணம்?’ என விசாரித்தோம். கரூர் சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாளை எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு நியமித்தது. அந்தக்குழு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ‘இவ்வளவு குறுகலான இடத்தை யார் கொடுத்தது?’ என கேள்வி எழுப்பி விஜய்க்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் அவர்கள் ரிப்போர்ட் இருந்தது. அதன் பிறகு ‘ஷா’வே நேரடியாக பேச முயற்சித்தும் விஜய் அதற்கு பிடிகொடுக்கவில்லை. அதனால்தான் வழக்கில் இந்த ‘ஷா’ இறங்கிவிட்டார்’’ என்றனர்.
விஜய்யின் கோபம் பி.ஜே.பி. மீது திரும்பியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் சாதுர்யம் அதிகம் இருக்கிறது. அதாவது, கரூர் சம்பம் தொடர்பான வழக்குப் பதிவில் விஜய்யின் பெயரையே சேர்க்கவில்லை தமிழக அரசு. விஜய்யின் பெயரை கண்டிப்பாக சேர்த்திருக்க வேண்டும். ஏனென்றால், விஜய்யை பார்ப்பதற்காக வந்தவர்கள்தான் இறந்திருக்கிறார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் சாதுர்யமாக விஜய் பெயரை சேர்க்கவில்லை. அதாவது, கரூர் துயர சம்பவம் தொடர்பாக எஃப்.ஐ.ஆரில் பெயரே இல்லாத விஜய்யை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மீண்டும் முதல்வர் ஆகும் யோகம் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காரணம் ‘கேம் சேஞ்சர்’ விஜய் ரசிகர்களின் கோபம் ‘என்-.டி.ஏ. பக்கம் திரும்பியிருக்கிறது.
