‘‘தமிழ்நாட்டில் பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என யாரையும் உள்ளே விடமாட்டோம்’’ என உதயநிதி ஸ்டாலின் ‘பஞ்ச்’ டயலாக் பேசியிருக்கிறார்.
சென்னை வியாசர்பாடியில் திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு வகையான நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ‘‘தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் கொண்டாடும் விழா என்றால் பொங்கல் விழா தான். உழைப்புக்கு மரியாதை செய்யும் விழா, விவசாயிகளுக்கு மரியாதை செய்யும் விழா பொங்கல் விழா. 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியால் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்தி கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் ஒவ்வொரு மாணவ – மாணவியர்களுக்கு மீண்டும் மடிக்கணினியை வழங்கினார்.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் செயல்படுத்தினால் தான் ஒன்றிய அரசு நிதியை வழங்கும் என தெரிவித்த பொழுதும் மொழி தான் முக்கியம் என 2500 கோடி ரூபாய் என்ன 10000 கோடி ரூபாய் கொடுத்தாலும், தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மாட்டேன் என உறுதியாக இருந்தார் முதலமைச்சர்.
எப்போதும் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லும் பொழுது பயந்து முகத்தை மறைத்துக் கொண்டுதான் செல்வார். இந்த முறை அவர் செல்வது அம்பலப்பட்டு விட்டதால் முகத்தை மறைக்காமல் இந்த முறை டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாட்டில் பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என யாரையும் உள்ளே விடமாட்டோம்.
மக்கள் தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஒன்றிய அரசு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக நமது வாக்குரிமையை பறித்தது. கழகத்தினர் தங்கள் பகுதியிலுள்ள ஒவ்வொருவரின் வாக்குரிமையையும் உறுதி செய்ய வேண்டும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மீண்டும் நமது ஆட்சி தான் அமைய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சராக இரண்டாவது முறையாக நம் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கழக நிர்வாகிகள் செயல்பட வேண்டும்’’ என தெரிவித்தார்.
