தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதனை அரசு தடுக்க தவறியதாக கூறி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.

தமிழ்நாடு – கேரளா எல்லையோர மாவட்டமாக தென்காசி உள்ளது. தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தினமும் ஏராளமான கனிமவளங்கள் கடத்தி செல்லப்படுகிறது.

மண், மணல், ஜல்லிகள் என்று ஏராளமான கனிம வளங்கள் தமிழகத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இதனை தடுக்க தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் கூட தொடர்ந்து தினமும் கனிமவளங்கள் லாரி லாரியாக கேரளாவுக்கு அள்ளி செல்லப்படுகிறது. இந்நிலையில் தான் கனிமவள கொள்ளையால் நொந்துபோன திமுக நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இதனை செய்தவரின் பெயர் சந்திரசேகர். இவர் தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பகுதியை சேர்ந்தவர். திமுகவில் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் சந்திரசேகர், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். அதில், ‘‘கழகத்தின் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சழல் துணை அமைப்பாளராக பணியாற்றினேன். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியத்தில் இருந்து ஏராளமான கனிமவளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

கனரக வாகனங்களால்பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் தீமைகளை பற்றி பலமுறை தங்களுக்கு எடுத்துரைத்தும் பலன் இல்லை. மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பளராக இருந்து கொண்டு எங்கள் பகுதி சுற்றுச்சூழலை காப்பாற்ற, பாதுகாக்க முடியவில்லை. எனவே எனது பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோரிடம் சுயமரியாதையை கற்ற மாணவர்.ஆகவே எனது சுயமரியாதையை காப்பாற்ற அடிப்படை உறுப்பினர்பொறுப்பில் இருந்து விலகுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal