‘ஜனநாயகன்’ படம் பொங்கலுக்கு வெளியிட முடியாத மன உளைச்சலில் இருக்கும் விஜய்க்கு, சி.பி.ஐ. வழக்கு விசாரணை வேகமெடுத்து, பிரச்சார வாகனம் பறிமுதல் செய்ததாக வெளியாக தகவல்கள் தான் மேலும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறதாம்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.

மேலும் 110 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் 2 நாட்கள் ஆய்வு செய்தனர். மேலும் கடந்த மாதம் 19-ந் தேதி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி தலைமையிலான குழுவினரும், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்தின் அதிகாரிகளும் அங்கு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நேற்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் பிரசாரம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர்.

விஜய்க்கு நாளை மறுநாள் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருக்கும் நிலையில், இன்று விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சென்னையில் இருந்து கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு பேருந்து கொண்டு வரப்பட்ட நிலையில், அந்த பேருந்தில் ஆய்வு நடைபெறுகிறது. பிரச்சார வாகன டிரைவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal