மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்றுவிட்டு இப்படி செய்யலாமா? என யூடியூபர் சவுக்கு சங்கருக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறினால் அதற்கான ஆதாரங்களை திரட்டி வைக்குமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் அடிப்படையில், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.
இதில், மருத்துவ காரணங்களுக்காக சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்கக் கோரி அவரது தாயார் கமலா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 ஆம் தேதி வரை 3 மாதங்கள் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையே, இந்த இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சைதாப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கியபோது நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை அவர் மீறியுள்ளார். மேலும், அவருக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். தொடர்ந்து, அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவக் குழு அமைக்க தயாராக உள்ளோம்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் பி.வேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ், சவுக்கு சங்கர் சாட்சிகளை மிரட்டி தொடர்ந்து தனது யூ டியூப் சேனலில் பேசி வருவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்றுவிட்டு இப்படி செய்யலாமா? என சவுக்கு சங்கருக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை சேகரித்து வைக்குமாறு அறிவுறுத்தினர். மேலும், மனு குறித்து சவுக்கு சங்கரின் தாயார் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
