வருகிற ஜனவரி 6ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது.
வரவிருக்கும் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இது ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த உரையை தமிழக அரசு தான் தயாரித்து வழங்கும். அதை அப்படியே ஆளுநர் வாசிப்பது மரபாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வருகிறது.

எனவே முழுபட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது. இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிதாக பதவியேற்கும் அரசு தான் 2026-27ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த சூழலில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக ஜனவரி 6ல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மக்களை கவரும் வகையிலான அறிவிப்புகள் பெரிதாக இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
ஏனெனில் ஆளும் திமுகஅரசு 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கவுள்ளனர். இதற்காக பிரத்யேகமாக மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமும் மக்களிடம் இருந்து கருத்துகள் கேட்கப்படுகின்றன.
