‘‘அரசு முறையாக செயல்பட்டிருந்தால் பூர்ண சந்திரன் உயிரிழந்திருக்க மாட்டார். அவரது இறப்புக்கு தமிழக அரசே முழு காரணம்’’ என அ.தி.மு.க. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தக் கோரி, மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ணசந்திரன் நேற்று முன்தினம் தல்லாகுளம் புறக்காவல் நிலையத்தில் தீக்குளித்து உயிரிழந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் இருந்த அவரது உடலுக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏவும், மருத்துவர் அணி இணைச் செயலாளருமான டாக்டர் பா.சரவணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர் களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் சரவணன் கூறியதாவது: ‘‘திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தமிழக அரசு தவறி விட்டதாக ஏற்கெனவே எங்களது பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.

அரசு முறையாக செயல்பட்டிருந்தால் பூர்ண சந்திரன் உயிரிழந்திருக்க மாட்டார். அவரது இறப்புக்கு தமிழக அரசே முழு காரணம். மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலும் வாக்குக்காகவும் திமுக அரசு இப்படி செயல்படுகிறது. அவரது குடும்பத்துக்கு நிதி உதவி மற்றும் அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’ என்று கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal