பீகார் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி தமிழக அரசியல் கள நிலவரம், கூட்டணி குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கோவைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இருவரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்காக கடந்த ஏப்ரல் மாதமே சென்னை வந்து, கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அப்போதே, அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தாங்கள் தலையிடப் போவதில்லை என தெரிவித்தார் அமித் ஷா.
அமித் ஷாவின் இந்த கருத்து, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களும், அந்த சமயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தவர்களுமான ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர். அதற்கேற்றாற் போல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறினர். பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனக் கூறிவந்த அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனையும், கட்சியிலிருந்து ஈபிஎஸ் நீக்கினார்.
இப்படி அதிமுகவை சுற்றி அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழலில்தான், தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க இன்று 1.30 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை, கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி வரவேற்க இருக்கிறார். தொடர்ந்து அவரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜக மூத்த தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்க உள்ளனர். நிகழ்ச்சி முடிந்தபிறகு, மாலை 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை அடையும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அதற்கு முன்னதாக, கோவையில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
பிகார் தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழ்நாட்டிலும் அதை அப்படியே மீண்டும் நிகழ்த்திக் காட்ட பாஜக விரும்புகிறது. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி சந்திக்கிறார். அப்போது ஒன்றுபட்ட அதிமுக பற்றி பிரதமர் அறிவுறுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தேமுதிக போன்ற கட்சிகளை சேர்ப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் வரவேற்று பேசுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
