ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோஜ் பாண்டியன். அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தியதில் இருந்தே அவரது ஆதரவாளராக மனோஜ் பாண்டியன் இருந்து வருகிறார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்களில் மிக முக்கிய நபராக அறியப்பட்ட மனோஜ் பாண்டியன் சமீப காலமாக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு மனோஜ் பாண்டியன் வருகை தந்தார். சேகர் பாபுவின் காரில் அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர் துரைமுருகனும் உடன் இருந்தார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை நடத்தி வரும் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலாவுடன் இணைந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழலில் அவரது வலது கரம் போல செயல்பட்டு வந்த மனோஜ் பாண்டியன் தற்போது திமுகவில் இணைந்து இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவை 3,539 என்ற குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்த திமுக தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது மனோஜ் பாண்டியன் அக்கட்சியில் இணைந்து உள்ளார்.

பாஜகவின் கிளை கழகமாக அதிமுக உள்ளதாக திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள மனோஜ் பாண்டியன், கொள்கைகளை பின்பற்றும் இயக்கமான திமுகவில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal