கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர், 3 பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். தமிழகம் முழுவதும் பேரதிரிச்சியை இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கியது.
திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் கண்களில் பெப்பர் ஸ்பிரே அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்’’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
