‘‘அதிமுகவா? அமித்ஷா திமுகவா? என்டிஏ கூட்டணியில் விஜய் சேருவாரா? என்கிற ஆராய்ச்சியை விட்டு மக்கள் நலனில் திமுக & காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்’’ என தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ், தமிழர், தமிழகத்தின், நலனை காக்க தவறிய, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை புறக்கணித்த, திமுக அரசை கூட்டணி கட்சிகள் விமர்சிக்க தயங்குவது ஏன்? பாஜக, அதிமுக, தவெக கூட்டணி ஏற்பட்டு விடுமா? அதிமுகவா? அல்லது அமித்ஷா திமுகவா? என்றும் ஆராய்ச்சி செய்வதை விட்டுவிட்டு, தேர்தல் கமிஷன் மீது குறை சொல்வதை விட்டுவிட்டு, மக்கள் விரோத திமுக அரசின் தவறுகளுக்கு எதிராக போராடி தமிழக மக்களின் உரிமைகளை காக்க தமிழக கட்சிகள் பாடுபட வேண்டும்.

தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தமிழக மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப அதிமுக & பாஜக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைத்து, ஊழலில் ஊறி திளைத்த, மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறியதில் இருந்து தமிழக முதல்வர். கலக்கமடைந்து விட்டார். தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் திமுகவை வீழ்த்த தேர்தலை எதிர் பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

பாஜகவுடன் அதிமுக, இணைந்தது முதல் அதிமுகவையும், முன்னாள் முதல்வர் இபிஎஸ் அவர்களையும் மனசாட்சி இல்லாமல், புதுப்புது பொய்கள் பேசி, கற்பனை கதைகளை கட்டவிழ்த்து விட்டு அவதூறு பிரச்சாரம் செய்து வருவதில் தான் திராவிடம் மாடல் திமுக ஆட்சி கவனம் செலுத்தி வருகிறது. வெளிநாடுகளில் திமுகவினர் செய்த ஊழல் பண முதலீடுகளை கணக்கீடு செய்யாமல், கோடநாடு கொலை குறித்து அவதூறு செய்வது நியாயமா? கூட்டணி தலைவர்களை எல்லாம் தூண்டிவிட்டு, அதிமுகவை இழிவுபடுத்தி பேச வைப்பதிலும், அதிமுகவை உடைக்கவும் தலைவர்களை பிரிக்கவும் சூழ்ச்சி மேற்கொள்வதிலும் முழு கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்கள் நலனில் ஆர்வம் காட்ட வேண்டும்.

புழல் ஏரியில் தண்ணீர் திறந்து விட்ட செய்தியை, எனக்கு ஏன் சொல்லவில்லை? சட்டமன்ற உறுப்பினர்களின், உள்ளாட்சி நிர்வாகிகளின் உரிமையை துரைமுருகன் பறித்து வருகிறார். என் உரிமையை கேட்கிறேன் இன்று நாடக அரசியல் செய்த எதிர்க்கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழகத்தில் கனிம வளம் சுரண்டப்படுவதையும், ஏரிகளிலும் ஆறுகளிலும் மணல் கொள்ளை நடப்பதையும் ஏன் தட்டிக் கேட்கவில்லை?

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததை மட்டும், அக்கறையுடன் தேடித்தேடி காரணங்களை கண்டுபிடித்து, தினமும் குறை சொல்லும் செல்வப் பெருந்தகை, மக்கள் விரோத தமிழக அரசின் தொடர் மக்கள் விரோத செயல்பாடுகளால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து குரல் கொடுக்காதது ஏன்?

பட்டியலின மக்களுக்கு துரோகம் செய்து, பட்டியலின மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மத்திய அரசு வழங்கிய நிதியை கபளிகரம் செய்த திமுக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டாமல், அண்ணா திமுக ஏன் பாஜகவுடன் கூட்டணி வைத்தது என்று அதிக அக்கறையுடன் ஆராய்ச்சி செய்து, தினம் ஒரு புளுகு மூட்டை அறிக்கை விடும் விசிக தலைவர் திருமாவளவன் இரண்டு எம் பி சீட்டுகளுக்காக தன்னையும் கட்சியின் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு பட்டியலின மக்களின் உரிமையை விற்றது நியாயமா?

ஒரு மனிதனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய தன்மானத்தையும் சுய கவுத்தையும் அரசியல் வியாபாரத்திற்காக முற்றிலுமாக அடகு வைத்து, திமுக அரசின் ஊது குழலாக, அதிமுக பாஜக கூட்டணி குறித்து விதவிதமான வசனங்களில் வித்தியாசமான வேடங்களில் தேர்ந்த நடிகராக தன்னைத் தானே இயக்கிக் கொள்ளும் தேர்தல் அரசியல் திரைப்படத்தின் இயக்குனர் சீமான், தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் எதிர்ப்பதில் காட்டும் ஆர்வத்தை தமிழக மக்கள் நலனில் ஏன் காட்டவில்லை? திமுகவிடம் வாங்கிய பெட்டிகளின் கணம் தடுக்கிறதா?

திமுகவின் பல்வேறு டீம்களாக ஏசி ஜனநாயக கூட்டணியை வீழ்த்த நினைக்கும் எதிர்கட்சிகள்,பாஜக அதிமுக கூட்டணியை ஒழிப்பதற்கு, புதுப்புது யுக்திகளுடன், யார் எந்த விதத்தில் எந்த ரூபத்தில் சதி செய்தாலும், துரோக அரசியலால் வீழ்த்த நினைத்தாலும் அத்தனையும் வென்றெடுத்து, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். எனவே தமிழக கட்சிகள் அதிமுக, பாஜக வெற்றி கூட்டணி மீது அவதூறு பேசி கெடுக்க நினைக்கும் சதி அரசியல் இனி எடுபடாது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொற்கால ஆட்சியின் மக்கள் நல திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்திட, அரசியல் சாணக்கியர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வழிகாட்டுதலில் தமிழகத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக பாஜக தலைவர் நைனா நாகேந்திரன் ஒருங்கிணைப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில், திமுகவை வீழ்த்தி மகத்தான வெற்றி பெறும்.

தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்க்கிறேன் என்று தேர்தல் கமிஷனையும், இது குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் என்று மத்திய பாஜக அரசையும் குறை சொல்வதுடன், என்ஆர்சி அமல்படுத்துவது தான் பாஜகவின் உண்மையான நோக்கம் என்றும் தேர்தல் கமிஷனின் நல்ல முயற்சியை களங்கப்படுத்தி, தமிழக மக்களின் நலன்களை புறக்கணிக்கும் வகையில் போலி வாக்காளர்களின் கூடாரமாக விளங்கும் திமுக கட்சி இன்று நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தின் ஜனநாயக படுகொலை முயற்சி இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது.

தேர்தல் கமிஷனின், உறுதியான தீவிர முயற்சியால், அனைத்துக் கட்சிகளின் ஙிலிகி 2 இன்று அழைக்கப்படும் ஒவ்வொரு, பகுதியிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள உள்ள “வாக்குச்சாவடி நிலை முகவர்” முன்னிலையில், தேர்தல் கமிஷனுக்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள தமிழக அரசு ஊழியர்களின் நேரடி மேற்பார்வையில் வீடுகள் தோறும் நடக்கும் நேரடி கள.ஆய்வின் மூலம் தமிழகத்தில் இருந்து, திமுகவினரால் சேர்க்கப்பட்டுள்ள போலி வாக்காளர்கள் அகற்றப்பட்டு ஜனநாயக முறைப்படி நேர்மையான வாக்குரிமை பெற்ற வாக்காளர்களுடன் 2026 சட்டமன்ற தேர்தல் ஜனநாயக முறையில் நடந்து ஊழல் திமுக ஆட்சி வீழ்த்தப்படும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal