நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தனது துறையில் உதவி செயற்பொறியாளர் பணிக்கு ரூ.25 லட்சம் முதல் 35 லட்சம் வரை பெற்றுக் கொண்டு வேலை வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யவும் தமிழக காவல்துறை தலைவருக்கு 250 பக்கங்கள் கொண்ட புகாரையும் அனுப்பியிருக்கிறது. இதுவரை தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால், அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தையோ அல்லது உச்சநீதிமன்றத்தையோ நாடவுள்ளது.

பணம் வாங்கிக்கொண்டு வேலை போட்டதற்கான வலுவான ஆதாரங்கள் அமலாக்கத்துறை வசம் சிக்கியிருப்பதுதான் கே.என்.நேருவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், திருச்சியில் அமைச்சர் நேரு பிறந்த நாளுக்காக, அவரது படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன.

வரும், நவம்பர் 9ம் தேதி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் பிறந்த நாள். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை, திருச்சி தி.மு.க.,வினர் பிரமாண்டமாக கொண்டாடுவர். வழக்கம் போல், இந்த ஆண்டும் நவம்பர் 9ம் தேதி அமைச்சர் நேரு பிறந்த நாளுக்காக, அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள் சார்பில், திருச்சி மாநகர பகுதியில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப் பட்டன. அவை, நேற்று முன்தினம் இரவில் அகற்றப்பட்டன.

இது குறித்து, திருச்சி தி.மு.க.,வினர் கூறும்போது, ‘‘அமலாக்கத் துறையினரால் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாகி உள்ளதால், அமைச்சர் நேரு அப்செட்டாகி உள்ளார். இந்த சூழலில், பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர் விரும்பவில்லை. அதோடு, வரும் 10ல், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், திருச்சி வரவுள்ளார்.

முதல்வர் வரும் வேளையில், தனக்காக பெரிய அளவில் பேனர்கள் வைப்பது, கட்சி தலைமையின் அதிருப்திக்கு உள்ளாகக்கூடும் என்பதால், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற, அமைச்சர் நேரு கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளார். தவிர தி.மு.க. தலைமையும் கே.என்.நேரு மீது அதிருப்தியில் உள்ளது. தலைமைக்கு தெரியாமலேயே ‘இந்த விஷயம்’ நடந்திருக்கிறதாம்’’ என்றனர்

இதற்கிடையில், அமைச்சர் கே.என்.நேரு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘நவம்பர் 9ல் நான் திருச்சியில் இருக்க மாட்டேன்; அதனால், எனக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, கட்சியினர், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என யாரும் என்னை சந்திக்க இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ வர வேண்டாம்’’ என தெரிவித்துள்ளார்.

தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்யாவிட்டால், இந்த மாத இறுதியில் நீதிமன்றத்தை நாடி அடுத்த கட்ட நடவடிக்கையில் அமலாக்கத்துறை இறங்குவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal