கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை காலை விசாரணை மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேல் 110 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து குஜராத்தை சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக். 31-ம் தேதி வேலுச்சாமி புரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4:30 மணி வரை சிபிஐ அதிகாரிகள் வேலுச்சாமி புரத்திற்கு சென்று அங்கு சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு நவீன கருவியான 3டி லேசர் ஸ்கேனருடன் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகைக்கு வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் கடைகள் வைத்திருக்கும் மளிகைக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் துணிக்கடை வியாபாரிகள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் உள்ளிட்ட 10 பேரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக விசாரணை விறுவிறுப்பாக நடந்து வருவதால் இந்த விவகாரத்தில் சிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. விரைவில் சி.பி.ஐ. அதிகாரிகள் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
